சர்வதேச லீக் டி20 தொடர்: ஏலத்தில் பங்கேற்க விரும்பும் அஸ்வின்
இந்த தொடருக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது.;
image courtesy:PTI
சென்னை,
சர்வதேச லீக் டி20 (ஐஎல்டி20) என்பது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் ஒரு டி20 கிரிக்கெட் தொடராகும். இது எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் 4-வது சீசன் இந்தாண்டு டிசம்பர் 2-ம் தேதி தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த சீசனுக்கான வீரர்களின் ஏலம் செப்டம்பர் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க இந்திய முன்னாள் வீரரான சென்னையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அஸ்வின், ‘ஆம், நான் ஏற்பாட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன். ஏலத்தில் பதிவு செய்தால், என்னை கண்டிப்பாக ஒருவர் வாங்குவார் என்று நம்புகிறேன்’ என கூறினார்.
ஏலத்தில் சேர செப்டம்பர் 10-ம் தேதி கடைசி தேதியாகும். ரவிச்சந்திரன் அஸ்வின் அண்மையில் ஐ.பி.எல். தொடரில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.