ஐ.பி.எல்.2026: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்..? ரசிகர்கள் அதிர்ச்சி
கடந்த ஐ.பி.எல். தொடரில் ரூ.9.75 கோடிக்கு அஸ்வினை சிஎஸ்கே வாங்கியது.;
image courtesy:PTI
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனில் சென்னை அணிக்காக ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி அணிக்கு பின்னடைவை கொடுத்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக தன்னை விடுவிக்குமாறு அவர் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீரர்களை தக்கவைப்பதற்கும், விடுவிப்பதற்கும் நவம்பர் மாதம் வரை கால அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.