அபார பந்துவீச்சு.. பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்த இந்தியா

மழை காரணமாக இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.;

Update:2025-12-14 20:01 IST

image courtesy:twitter/@ACCMedia1

துபாய்,

19 வயதுக்கு உட்பட்டோருக்கான (இளையோர்) 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் 8 முறை சாம்பியனான இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த போட்டி தொடரில் 3-வது நாளான இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டடத்தில் பரம எதிரிகளான இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இந்த ஆட்டம் 49 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 46.1 ஓவர்களில் 240 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆரோன் ஜார்ஜ் 85 ரன்களும், கனிஷ்க் சவுஹான் 46 ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது சய்யாம் மற்றும் அப்துல் சுப்ஹான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 241 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. அந்த அணியில் ஹுசைபா அஹ்சன் (70 ரன்கள்), பர்ஹான் யூசுப் (23 ரன்கள்) மற்றும் உஸ்மான் கான் (16 ரன்கள்) தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

முடிவில் 41.2 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாகிஸ்தான் அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அளவுக்கு அபாரமாக பந்து வீசிய இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சவுஹான் தலா 3 விக்கெட்டுகளும், கிஷன் குமார் சிங் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்திய அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் ஆட்டத்தில் யுஏஇ-க்கு எதிராக இந்தியா ஏற்கனவே வெற்றி கண்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்