3-வது டி20: ஜஸ்பிரித் பும்ரா ஏன் இடம்பெறவில்லை..? பி.சி.சி.ஐ. விளக்கம்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.;

Update:2025-12-14 19:04 IST

image courtesy:PTI

தர்மசாலா,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்தியா 101 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசண்டிகாரில் நடந்த 2-வது ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு பதிலடி கொடுத்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது போட்டி மலைவாசஸ்தலமான தர்மசாலாவில் உள்ள இமாசலபிரதேச மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இரண்டு மாற்றங்களாக முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல் ரவுண்டர் அக்சர் படேல் ஆகியோருக்கு பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறாதது பலரது மத்தியில் கேள்வியை எழுப்பியது. ஏனெனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா தேர்வு செய்யப்பட்டுள்ளதால் பலரது மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறாததற்கான காரணம் குறித்து பி.சி.சி.ஐ. விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில், “உடல்நலக்குறைவு காரணமாக மூன்றாவது டி20 போட்டியில் அக்சர் படேல் பங்கேற்கவில்லை.

ஜஸ்பிரித் பும்ரா தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளார், மேலும் அவர் இந்த போட்டியில் பங்கேற்க மாட்டார். மீதமுள்ள போட்டிகளுக்கான அணியில் அவர் இணைவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்” என்று விளக்கமளித்துள்ளது.

இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன் பின்வருமாறு:-

இந்தியா: அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

தென் ஆப்பிரிக்கா: ரீசா ஹென்ட்ரிக்ஸ், குயின்டன் டி காக், மார்க்ரம் (கேப்டன்), டெவால்ட் பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டொனோவன் பெரீரா, மார்கோ ஜான்சன், கார்பின் போஷ், அன்ரிச் நார்ட்ஜே, லுங்கி என்கிடி, ஒட்னீல் பார்ட்மேன்

Tags:    

மேலும் செய்திகள்