ஐ.பி.எல். ஒன்றும் தமிழ்நாடு கிரிக்கெட் அல்ல: அஸ்வின் -சிஎஸ்கே விவகாரத்தில் ஸ்ரீகாந்த் கருத்து
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் தன்னை விடுவிக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்திடம் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இதில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்னதாக இந்த சீசனில் சென்னை அணிக்காக ரூ.9.75 கோடிக்கு வாங்கப்பட்ட தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் எதிர்பார்ப்புக்கு நிகராக செயல்படவில்லை. 9 போட்டிகளில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி அணிக்கு பின்னடைவை கொடுத்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்தனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக தன்னை விடுவிக்குமாறு அவர் சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் மூத்த வீரர்களை கழற்றி விட்டு இளம் வீரர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் வீரரான ஸ்ரீகாந்த் சில கருத்துகளை கூறியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், “நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாளின் இறுதியில் இது பிரான்சைஸ் கிரிக்கெட். இது தமிழ்நாடு கிரிக்கெட் அல்ல. அஸ்வின் உருவாக்கிய அனைத்து சாதனைகளுக்காகவும் நாம் அனைவரும் அவரைப் பாராட்டுகிறோம். அவர் ஐ.பி.எல்.-க்காக அற்புதமாகச் செய்துள்ளார், அவர் சிஎஸ்கே-வுக்காக அற்புதமாகச் செய்துள்ளார், அதுமட்டுமின்றி இந்தியா மற்றும் தமிழ்நாட்டிற்காகவும் அவர் அற்புதமாக செயல்பட்டுள்ளார்.
ஆனால் அதற்காக சிஎஸ்கே கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்று அர்த்தமல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளைப் பார்த்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதனால் அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் சிறந்த அணியைத் தேர்வு செய்ய முயன்றனர். இளம் வீரர்களான ஆயுஷ் மத்ரே, டெவால்ட் பிரெவிஸ் மற்றும் உர்வில் படேலைப் பார்த்தால், சில போட்டிகளில் அற்புதமாக விளையாடினார்கள். எனவே பேட்டிங் வலுவாகத் தெரிகிறது.
எனவே அவர்கள் சில நல்ல பந்து வீச்சாளர்களைப் பெற வேண்டும். எனவே அவர்கள் நிச்சயமாக அவர்களுக்கு சாம்பியன்ஷிப்பை வெல்லும் ஒரு அணியை உருவாக்க முயற்சிப்பார்கள். ஜாம்பவான் என்ற பெயருக்காக நீங்கள் அவரை வைத்திருக்க முடியுமா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இது பிரான்சைஸ் கிரிக்கெட்.
அவர் இந்திய கிரிக்கெட் அணியில் கூட இல்லை. பார்டர்-கவாஸ்கர் டிராபியில் அவரை விட வாஷிங்டன் சுந்தரை இந்திய அணி விரும்பியது. அவர் தனது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கிறார். அவர் அற்புதமாக சாதித்துள்ளார். ஆனால் ஐ.பி.எல். போன்ற தனியார் தொடர் வித்தியாசமானது. இது கார்ப்பரேட் நடத்தும் தொடராகும். அதே கார்ப்பரேட் கிரிக்கெட் உங்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தைத் தருகிறது” என்று கூறினார்
அடுத்த ஐ.பி.எல். தொடருக்கு முன் வீரர்களை தக்கவைப்பதற்கும், விடுவிப்பதற்கும் நவம்பர் மாதம் வரை கால அவகாசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.