அது விரக்தியடைய வைத்தது - ஆசிய கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது சர்ச்சையை கிளப்பியது.;
image courtesy:PTI
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை (9-ந்தேதி) முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்குள்ளானது.
குறிப்பாக சமீப காலமாக வெள்ளைப்பந்து போட்டிகளில் அசத்தலான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அத்துடன் பல முன்னாள் வீரர்கள் இந்திய தேர்வுக்குழுவை கடுமையாக விமர்சித்தனர். இது அந்த சமயத்தில் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் கழற்றி விடப்பட்டது விரக்தியடைய வைத்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தமக்கு பதிலாக தேர்வு செய்யப்பட்ட வீரரும் திறமையானவர்தான் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நீங்கள் பிளேயிங் லெவனில் இருக்க தகுதியானவர் என்பது உங்களுக்கு தெரிந்தால் மட்டுமே இது விரக்தியாக இருக்கும். அந்த நேரத்தில் (அணி அறிவிக்கப்பட்ட) கண்டிப்பாக அது விரக்தியை கொடுத்தது. ஆனால் அதே சமயம் ஒருவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவதால் அணிக்குள் கொண்டு வரப்படுகிறார். எனவே நீங்கள் அவர்களை ஆதரிக்க வேண்டும். இறுதியாக, அணி வெற்றி பெறுவதே குறிக்கோள். அணி வெற்றி பெறும்போது எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஆனால் நேர்மையாக பேச வேண்டுமெனில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் நீங்கள் உங்கள் வேலை நெறிமுறைகளை சரியாக செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். யாராவது பார்க்கும்போது மட்டும் நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில்லை. யாரும் பார்க்காதபோதும், நீங்கள் உங்கள் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.