நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது எளிது அல்ல - கருண் நாயரை பாராட்டிய கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.;

Update:2025-06-13 10:49 IST

Image Courtesy: @BCCI

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோகித் ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் கருண் நாயர் 8 ஆண்டுக்கு பிறகு இடம் பிடித்துள்ளார். உள்ளூர் போட்டிகளில் தொடர்ச்சியாக ரன் குவித்ததன் காரணமாக அவருக்கு தேசிய அணியின் கதவு திறந்துள்ளது. குறிப்பாக 2024-25-ம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட்டில் விதர்பா அணிக்காக 9 ஆட்டங்களில் ஆடி 4 சதம் உள்பட 863 ரன்கள் எடுத்தார். விஜய் ஹசாரே ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 5 சதங்கள் விளாசி கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், கருண் நாயரை பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்புவது என்பது எளிதானது அல்ல. உள்ளூர் கிரிக்கெட்டில் நீங்கள் எவ்வளவு ரன் குவித்துள்ளீர்கள் என்பது விஷயமல்ல.

ஒரு போதும் நம்பிக்கையை இழக்காமல், விடாமுயற்சியுடன் தொடர்ந்து பேராடி மீண்டெழும் மனப்பாங்கு தான் முக்கியம். அது தான் அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது. இது ஒட்டுமொத்த அணிக்கும் உத்வேகம் அளிக்கிறது. அவரை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்