இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துவிட்டால் கம்பீர்.. - மைக்கேல் அதர்டன் எச்சரிக்கை
இந்தியா-இங்கிலாந்து கடைசி டெஸ்ட் இன்று தொடங்கியது.;
லண்டன்,
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முடிவடைந்துள்ள 4 போட்டிகளின் முடிவில் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி டிரா) முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடரை சமன் செய்ய வேண்டுமெனில் இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரை இந்திய அணி இழந்து விட்டால் கவுதம் கம்பீர் அழுத்தத்திற்குள்ளாவார் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் அதர்டன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "ஏற்கனவே இந்தியா அடுத்தடுத்த 2 டெஸ்ட் தொடர்களில் தோற்றுள்ளது. சொந்த ஊரில் நியூசிலாந்திடம் 3 - 0 என்ற கணக்கில் தோற்ற அவர்கள், அடுத்ததாக 3 - 1 என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் - கவாஸ்கர் கோப்பையை இழந்தார்கள். அடுத்ததாக இங்கேயும் இந்தியா தோற்கும் பட்சத்தில் கவுதம் கம்பீர் அழுத்தத்திற்குள் தள்ளப்படுவார். ஏனெனில் இந்தியாவுக்கு தேவையான அனைத்து வளங்களும் இருக்கின்றன. அவர்களுடைய மக்கள் தொகை அதிகம். அதனால் அவர்கள் வெற்றிக்காக காத்திருக்கக்கூடிய ரசிகர்கள் கிடையாது. அவர்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியை எதிர்பார்க்கக் கூடியவர்கள். எனவே 3 டெஸ்ட் தொடர்களில் தொடர்ச்சியாக தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் அது கவுதம் கம்பீருக்கு மிகப்பெரிய பிரச்சினையாக அமையும்" என்று கூறினார்.