உலகக்கோப்பை அல்ல... அந்த ஒருநாள் தொடரே விராட், ரோகித் சர்மாவின் கடைசி .. ரசிகர்கள் அதிர்ச்சி

ரோகித் மற்றும் விராட் இருவரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர்.;

Update:2025-08-10 14:17 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் சமீபத்தில் அறிவித்தனர்.

இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்களை தேர்வு செய்ய பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியான நிலையில் இருவரும் அடுத்தடுத்து ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தனர்.

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலகக்கோப்பை (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலகக்கோப்பை வரை தொடர்ந்து பார்மில் இருக்க முடியுமா? என்பது சந்தேகம்தான்.

அந்த உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஏறக்குறைய 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்து அசத்தினால் மட்டுமே உலகக்கோப்பை வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான பி.சி.சி.ஐ.-ன் திட்டத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்த ஒருநாள் தொடரே கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச தொடராக அமையலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும், விராட் கோலி மற்றும் ரோகித் இருவரும் ஒருநாள் உலகக்கோப்பையில் இடம் பெற வேண்டுமென்றால், இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கும் உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. விஜய் ஹசாரே டிராபி பங்கேற்பு இல்லாமல், உலகக்கோப்பை தொடரில் அவர்களுக்கான கதவு திறக்க வாய்ப்பில்லை என தகவல்கள் கூறுகின்றன. 

Tags:    

மேலும் செய்திகள்