நூர் அகமது அபாரம்; லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்திய டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்
மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.;
Image Courtesy: @TexasSuperKings
கலிபோர்னியா,
எம்.எல்.சி என அழைக்கப்படும் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 3வது சீசன் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெக்சாஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. டெக்சாஸ் தரப்பில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 36 ரன் எடுத்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் தரப்பில் தன்வீர் சங்கா 2 விக்கெட் வீழ்த்தினார்.
தொடர்ந்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த லாஸ் ஏஞ்சல்ஸ் அணி, டெக்சாஸ் அணியினரின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 57 ரன் வித்தியாசத்தில் டெக்சாஸ் அணி அபார வெற்றி பெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாட்லி வான் ஷால்க்விக் 27 ரன் எடுத்தார். டெக்சாஸ் தரப்பில் நூர் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.