கிரிக்கெட்டில் மட்டும் அல்ல... விராட் கோலி அந்த விஷயங்களிலும் சிறந்தவர் - தோனி பகிர்ந்த சுவாரசியம்
களத்திற்கு வெளியே விராட் கோலியின் பண்புகள் குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது.;
image courtesy:PTI
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்குரியவர் மகேந்திரசிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி. உலகக்கோப்பைகளை வென்று கொடுத்த சாதனையாளர். கேப்டன்ஷிப்பில் மட்டுமின்றி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார். விக்கெட் கீப்பங்கிலும் சாதனைகள் படைத்துள்ள அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்யும் திறமை படைத்தவர்.
அத்துடன் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பல இளம் வீரர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளம் காட்டியவர். ஐ.பி.எல். தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கி 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.
இதனிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி தனது நீண்டகால அணித் தோழர் விராட் கோலியைப் பற்றி மனம் திறந்து பேசினார். களத்திற்கு வெளியே கோலியின் பண்புகளைப் பற்றி தோனி பேசினார்.
அதில் கிரிக்கெட்டைத் தாண்டிய குணங்களைப் பற்றி கேட்டபோது, கோலி ஒரு சிறந்த பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என்று தோனி சுவாரசியமான தகவலை பகிர்ந்தார்.
இது குறித்து பேசிய தோனி கூறுகையில், “அவர் (விராட் கோலி) நன்றாகப் பாடுவார். அவர் ஒரு நல்ல பாடகர். அவர் ஒரு நல்ல நடனக் கலைஞர். அதைவிட மிமிக்ரியில் சிறந்தவர். அவர் ஜாலியான மனநிலையில் இருந்தால் மிகவும், மிகவும் பொழுதுபோக்கு அம்சம் கொண்டவர்” என்று கூறினார்.