ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவின் வெற்றி பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.;

Update:2025-10-20 03:30 IST

image courtesy:ICC

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக இந்த போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட், ஓவன், மேத்யூ குனேமான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து டி.எல்.எஸ். விதிப்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த ஆண்டில் இந்தியாவின் முதல் தோல்வி இதுவாகும். நடப்பாண்டில் 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது. இந்தியாவின் அந்த வெற்றி பயணத்திற்கு ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்