நான் பார்த்ததிலேயே ஒரு சிறப்பான இன்னிங்ஸ் - சூர்யவன்ஷியை பாராட்டிய ஜெய்ஸ்வால்
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சூர்யவன்ஷி சதம் அடித்து அசத்தினார்.;
Image Courtesy: @IPL / @rajasthanroyals
ஜெய்ப்பூர்,
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 47-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 209 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 84 ரன்கள் அடித்தார்.
பின்னர் 210 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சூர்யவன்ஷி சதம் விளாசினார். அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சூர்யவன்ஷியின் ஆட்டம் நான் பார்த்ததிலேயே ஒரு சிறப்பான இன்னிங்ஸ் என யஷஸ்வி ஜெய்வால் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, உண்மையிலேயே இது ஒரு நம்ப முடியாத இன்னிங்ஸ். நான் பார்த்ததிலேயே இது ஒரு சிறப்பான இன்னிங்ஸ் என்று கூறுவேன்.
மேலும் இனிவரும் போட்டிகளிலும் அவர் தொடர்ச்சியாக இதே போன்ற சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன். அவர் இன்னும் பல ஆண்டுகள் எங்கள் அணிக்காக தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றும் நம்புகிறேன். இந்த போட்டியின் போது அவர் விளையாடிக் கொண்டிருக்கையில் அதிரடியாக விளையாடவே அவரிடம் ஆலோசனைகளை வழங்கினேன்.
உண்மையிலேயே இன்றைய போட்டியில் அவர் அற்புதமான ஷாட்களை விளையாடினார். வலைப்பயிற்சியின் போது எவ்வாறு அவர் விளையாடினார் என்பதை நாங்கள் அருகில் இருந்து பார்த்திருக்கிறோம். அந்த வகையிலேயே இன்று அதிரடியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். இனியும் அவர் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எனது வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.