யு.ஏ.இ அணியுடன் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.;
Image Courtesy : @ACBofficials twitter
மும்பை,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும்.
இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது
இந்நிலையில், இந்த தொடருக்கு முன் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அணிகள் ஐக்கிய அரபு அமீரக அணியுடன் இணைத்து முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த முத்தரப்பு டி20 தொடரானது ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில் ஒவ்வொரு அணியும் தலா இரண்டு முறை நேருக்கு நேர் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானைத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை டி20 தொடர் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் வகையில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இந்த தொடரில் விளையாடவுள்ளன.