நாட்டுக்காக விளையாடுவது முக்கியம் - பும்ராவை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்

இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.;

Update:2025-07-18 06:00 IST

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் மோதும் 4-வது போட்டி வரும் 23-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்க உள்ளது.

தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க இந்த 4-வது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்குள் இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மிக முக்கியான போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? என்பதில் பெரிய கேள்வி நிலவுகிறது. ஏனெனில் இந்த தொடரின் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே முதல் மற்றும் 3-வது போட்டிகளில் அவர் விளையாடி விட்டதால் மீதமுள்ள 2 போட்டிகளில் எந்த ஒன்றில் விளையாடுவார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வியில் நிலவுகிறது.

இந்நிலையில் பணிச்சுமை காரணமாக பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதை இந்திய முன்னாள் வீரரான திலீப் வெங்சர்க்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஒரு சுற்றுப்பயணத்தின்போது பந்து வீச்சாளரே எந்த டெஸ்டில் ஆடுவது என்பதை தேர்ந்தெடுத்து விளையாடுவதை நான் ஆதரிக்க மாட்டேன். அவர் முழு உடல்தகுதியுடன் இருந்தால், நாட்டுக்காக அனைத்து போட்டியிலும் ஆட வேண்டும். பும்ரா உலகத்தரம் வாய்ந்த வீரர். அவரால் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தர முடியும். ஒரு சுற்றுப்பயணத்துக்கு நீங்கள் வந்து விட்டால் அனைத்து ஆட்டங்களிலும் ஆட வேண்டியது அவசியமாகும். தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் ஆட்டங்களை தேர்ந்தெடுக்கும் பேச்சுக்கே இடமில்லை.

நாட்டுக்காக விளையாடுவது முக்கியம். நீங்கள் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றால், எந்த போட்டியிலும் ஆட வேண்டாம். முதல் டெஸ்டுக்கு பிறகு ஏறக்குறைய 7-8 நாட்கள் இடைவெளி இருந்தது. என்றாலும் 2-வது டெஸ்டுக்கான பிளேயிங் லெவனில் பும்ராவை சேர்க்காததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை இந்த முடிவை தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் ஏற்றுக்கொள்ளலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்