சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்ற புஜாரா படைத்த சாதனைகள்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா இன்று ஓய்வு அறிவித்தார்.;
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான புஜாரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து இன்று ஓய்வு அறிவித்தார். கடைசியாக 2023-ம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய அவர் அதன்பின் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த சூழலில் இன்று ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் டிராவிட்டுக்கு பிறகு இந்தியாவின் தூணாக கருதப்பட்ட அவர் அதற்கேற்றவாறே சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய பங்காற்றினார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 3 இரட்டை சதங்கள் உட்பட 7,195 ரன்கள் குவித்துள்ளார். அதுபோக 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 51 ரன்கள் அடித்துள்ளார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற புஜாரா படைத்த மறக்க முடியாத சாதனைகளில் சிலவற்றை இங்கு காணலாம்..!
1. ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 500+ பந்துகள் எதிர்கொண்ட முதல் இந்திய வீரர் என்ற மகத்தான சாதனையை புஜாரா படைத்தார்.
2. ஆஸ்திரேலிய மண்ணில் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களை இந்திய அணி வெல்வதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது அதிக ரன்கள் அடித்த அவர் தொடர்நாயகன் விருது வென்றார்.
3. ஒரு டெஸ்டின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் புஜாரா.
4. 2013-ம் ஆண்டு ஐசிசி-ன் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்று புஜாரா சாதனை படைத்தார்.
5. 2006-ல் நடைபெற்ற ஐசிசி யு-19 உலகக்கோப்பையில் 349 ரன்கள் அடித்த புஜாரா இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்று சாதனை படைத்தார்.
இதுபோக முதல் தர கிரிக்கெட்டில் அதிக இரட்டை சதங்கள் (18) அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை புஜாரா படைத்துள்ளார்.