ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்

முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.;

Update:2025-10-15 08:07 IST

கோவை,

இந்தியாவில் உள்நாட்டில் நடக்கும் பிரதான முதல்தர கிரிக்கெட்டான 91-வது ரஞ்சி கோப்பை தொடர் பல்வேறு நகரங்களில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. ‘எலைட்’ பிரிவில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது. ஜார்கண்ட், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா, பரோடா, நாகாலாந்து, நடப்பு சாம்பியன் விதர்பா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். இதேபோல் ‘பிளேட்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 6 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி அடுத்த ஆண்டு ‘எலைட்’ பிரிவுக்கு ஏற்றம் பெறும்.

இன்று தொடங்கும் முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது. இந்த ஆட்டம் கோவையில் காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

மற்ற ஆட்டங்களில் கேரளா- மராட்டியம், சவுராஷ்டிரா- கர்நாடகா, விதர்பா-நாகாலாந்து, மும்பை-ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதுகின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்