4-வது டெஸ்டுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்டை சேர்க்கக்கூடாது - ரவி சாஸ்திரி
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.;
கோப்புப்படம்
துபாய்,
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் பந்தை பிடிக்க முயற்சித்த போது, இடதுகை ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த ஆட்டம் முழுவதும் அவர் விக்கெட் கீப்பிங் செய்ய வரவில்லை.
இதனால் துருவ் ஜூரெல் விக்கெட் கீப்பர் பணியை கவனித்தார். ஆனால் பண்ட் பேட்டிங் மட்டும் செய்தார். மான்செஸ்டரில் வருகிற 23-ந்தேதி தொடங்கும் 4-வது டெஸ்டிலும் அவர் விக்கெட் கீப்பிங் செய்வது சந்தேகம் தான். இதனால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் ரிஷப் பண்டால் விக்கெட் கீப்பிங் செய்ய முடியவில்லை என்றால், அவர் அடுத்த போட்டியில் விளையாடக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இது தொடர்பாக ரவி சாஸ்திரி கூறியதாவது,
4-வது டெஸ்டில் ரிஷப் பண்டால் விக்கெட் கீப்பராக செயல்பட முடியாது என்றால், அவர் ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் களம் காணக்கூடாது. ஏனெனில் பேட்ஸ்மேனாக இறங்கினால், அதன் பிறகு பீல்டிங் செய்தாக வேண்டும். பீல்டிங் செய்தால், அவரது காயத்தன்மை மோசமாகிவிடும். விக்கெட் கீப்பருக்கான கையுறைகளுடன் இருந்தால், குறைந்தபட்சம் பந்தை பிடிக்கும் போது சற்று பாதுகாப்புடன் இருக்கலாம். அது இல்லாமல் அவர் பீல்டிங் செய்து, காயமடைந்த விரலில் மீண்டும் அடிபட்டால், அது நன்றாக இருக்காது.
அத்துடன் அவரது காயத்தின் தன்மையும் மோசமாகிவிடும். அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ய வேண்டும். அதில் ஒன்றை மட்டும் செய்ய முடியும் என்ற நிலை வந்தால், அவரை அணியில் சேர்க்கக்கூடாது. அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால், ஓய்வு எடுத்துவிட்டு ஓவலில் நடைபெறும் கடைசி டெஸ்டுக்கு தயாராகட்டும். காயத்தில் இருந்து மீண்டு வர அவருக்கு 9 நாட்கள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.