இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை சேர்த்திருக்க வேண்டும் - முன்னாள் கேப்டன் கருத்து

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.;

Update:2025-06-11 16:53 IST

image courtesy:PTI

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இம்முறை ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட பெரும்பாலான சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்று விட்டதால் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் சாய் சுதர்சன், கருண் நாயர் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆனால், சமீப காலமாக சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் இந்த அணியில் இடம் பெறவில்லை. இது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரை இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்த்திருக்க வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இது தொடர்பாக கங்குலி கூறியதாவது, ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த ஒரு வருடமாக அவருடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இந்த டெஸ்ட் அணியில் இருந்திருக்க வேண்டும். கடந்த ஒரு வருடம் அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அவர் வெளியேற்றப்பட வேண்டிய வீரர் அல்ல. கடும் நெருக்கடிக்கு கீழ் ரன்கள் குவித்து வருகிறார்.

பொறுப்பை எடுத்துக் கொள்கிறார். ஷார்ட் பாலை சிறப்பாக விளையாடுகிறார். டெஸ்ட் கிரிக்கெட் மாறுபட்டவை என்றாலும், அவரால் என்ன செய்ய முடிகிறது என்பதை பார்க்க இந்த தொடருக்கான அணியில் சேர்த்திருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்