'சிராஜ் அவுட் ஆன விதம் துரதிர்ஷ்டவசமானது' - கில்லிடம் சொன்ன மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசை, இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் நேற்று சந்தித்தனர்.;
Image Courtesy: @ICC
லண்டன்,
இங்கிலாந்தில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினர் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசை, லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் அரண்மனையில் நேற்று சந்தித்து கலந்துரையாடினர். அப்போது கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டன் ரிஷப் பண்டிடம் 3-வது டெஸ்டின் பரபரப்பான தருணங்கள் குறித்து மன்னர் ஜாலியாக விவாதித்தார்.
இது குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கூறியதாவது, 'மன்னரை சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்களது உரையாடல் சிறப்பாக இருந்தது. 3-வது டெஸ்டில் கடைசி விக்கெட்டாக முகமது சிராஜ் அவுட் ஆன விதம் (பந்து பேட்டில் பட்டு உருண்டு சென்று ஸ்டம்பில் பட்டது) மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மன்னர் கூறினார். அந்த அவுட்டை எப்படி உணர்ந்தீர்கள் என்றும் கேட்டார்.
ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமென்றாலும் சென்றிருக்கலாம். ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று சொன்னேன். நிச்சயம் அடுத்த இரு டெஸ்டில் எங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கும் என்று நம்புவதாகவும் கூறினேன்' என்றார்.