அபிஷேக் சர்மாவை பாராட்டிய இலங்கை தலைமை பயிற்சியாளர்
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது.;
Image Courtesy: @BCCI
துபாய்,
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த சூப்பர்4 சுற்றின் 6-வது மற்றும் கடைசி லீக்கில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. இதில் சூப்பர் ஓவரில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்த தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அபிஷேக் சர்மாவை இலங்கை தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பாராட்டி பேசி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதனை இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிக்கிறது.
அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதற்கு அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே காரணம். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரால் மெதுவாகவும் விளையாட முடிகிறது. அதனால், நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றங்களை கண்டு வருகிறார்.
அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் பயிற்சியாளர்கள் முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளனர் என நினைக்கிறேன். அதன் காரணமாக, அவரால் மிகவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.