டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் முதலிடத்தை பிடித்த பவுமா
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி கோப்பையை கைப்பற்றியது.;
image courtesy:twitter/@ICC
லண்டன்,
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 212 ரன்களும், தென் ஆப்பிரிக்கா 138 ரன்களும் எடுத்தன.
பின்னர் 74 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 65 ஓவர்களில் 207 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து 282 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 83.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தென் ஆப்பிரிக்க தரப்பில் அதிகபட்சமாக மார்க்ரம் 136 ரன்களும், கேப்டன் பவுமா 66 ரன்களும் அடித்தனர்.
ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், கம்மின்ஸ், ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். தென் ஆப்பிரிக்க வீரர் மார்க்ரம் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ள பவுமா அதில் 9 வெற்றிகள் பெற்றுள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் 10 போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன்களின் மாபெரும் சாதனை பட்டியலில் பெர்சி சாப்மேன் (இங்கிலாந்து) உடன் முதலிடத்தில் இணைந்துள்ளார்.