டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை தகர்த்து புதிய சாதனை படைத்த ஜோ ரூட்
இந்தியாவுக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் 11 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார்.;
image courtesy:ICC
மும்பை,
இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை அதிரடியாக தொடங்கிய இங்கிலாந்து 2-வது நாள் முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 94 ரன்னிலும், ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். துணை கேப்டன் ஆலி போப் (20 ரன்), முன்னாள் கேப்டன் ஜோ ரூட் (11 ரன்) களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். அவர்களை இந்திய பவுலர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. 'நம்பர் 1' பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் பந்து வீச்சிலும் திணறடிக்கும் அளவுக்கு வேகம் இல்லை. இதனால் இங்கிலாந்து அணியினர் சிரமமின்றி ரன் சேகரித்தனர்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 544 ரன்கள் சேர்த்து, 186 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியுள்ளது. பென் ஸ்டோக்ஸ் 77 ரன்களுடனும், லியாம் டாசன் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆலி போப் 71 ரன்களிலும், ரூட் 150 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இந்தியாவுக்கு எதிராக ஜோ ரூட் அடித்த 12-வது டெஸ்ட் சதம் இதுவாகும். இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை ஜோ ரூட் படைத்துள்ளார். இதற்கு முன்னர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 11 சதங்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது ஸ்டீவ் ஸ்மித்தின் சாதனையை தகர்த்துள்ள ஜோ ரூட் புதிய சாதனை படைத்துள்ளார்.