நாதன் லயனுக்கு எதிராக புஜாராவை சிக்சர் அடிக்க வைத்தது இப்படித்தான் - ரோகித் சர்மா பகிர்ந்த சுவாரசியம்

“தி டைரி ஆப் எ கிரிக்கெட்டர்ஸ் வைப்” என்ற பெயரில் புஜாராவின் மனைவி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.;

Update:2025-06-08 15:39 IST

image courtesy:PTI

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் புஜாரா. 2010-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். 2010 - 2023 வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், அதில் 7,000-க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடர்களை இந்தியா வென்று சரித்திரம் படைக்க அவர் முக்கிய பங்காற்றினார்.

முன்னதாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல களத்தில் நங்கூரமாக விளையாடும் ஸ்டைலைக் கொண்டிருந்த புஜாரா நிறைய பந்துகளை எதிர்கொண்டு ரன்களை குவிக்கும் அணுகுமுறையை பின்பற்றினார். இந்திய டெஸ்ட் அணி பேட்டிங் ஆர்டரில் முக்கியமான 3-ம் வரிசையில் ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்பியவர் புஜாரா. இருப்பினும் 2023-ம் ஆண்டுக்குப்பின் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட புஜாரா அதன்பின் இடம் கிடைக்காமல் போராடி வருகிறார்.

இந்த சூழலில் "தி டைரி ஆப் எ கிரிக்கெட்டர்ஸ் வைப்" என்ற பெயரில் புஜாராவின் மனைவி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தம்முடைய கணவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து அவர் பகிர்ந்துள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா, 2022-23 பார்டர் கவாஸ்கர் கோப்பையில் பொறுமையாக விளையாடி கொண்டிருந்த புஜாராவை லயன் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க வைத்தது குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் நாதன் லயனை கொஞ்சம் அடித்து நொறுக்க விரும்பினோம்.  நாங்கள் டிக்ளேர் செய்யலாமா அல்லது வேறு ஏதாவது செய்யலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அதற்காக இப்போது எதையாவது மாற்றியாக வேண்டும் என்று நினைத்தேன். நாங்கள் வேகமாக ரன்கள் குவிக்க விரும்பினோம்.

அப்போது நாதன் லயன் மின்-ஆன் பீல்டரை உள்ளே வைத்து பவுலிங் செய்தார். அதைப் பார்த்த நான் இந்த சூழ்நிலையில் அடிக்க முடியாமல் இருப்பதற்கு நாதன் லயன் அவ்வளவு சிறந்த பவுலர் இல்லையென்று கருதினேன். அந்த பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் நாங்கள் வேகமாக ரன்கள் குவிக்க விரும்பினோம். அதனால் புஜராவிடம் அதை (வேகமாக ரன்கள் அடிக்க) சொல்லுமாறு நான் இஷான் கிஷனை அனுப்பினேன். அதன்பின் புஜாராவும் சிக்சர் அடித்தார்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்