முத்தரப்பு டி20 தொடர்: யுஏஇ அணியை வீழ்த்தி பாகிஸ்தான் 2-வது வெற்றி

பாகிஸ்தான் வீரர் சைம் அயூப் இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.;

Update:2025-08-31 14:08 IST

image courtesy:ICC

சார்ஜா,

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் சார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. செப்டம்பர் 7-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியை எட்டும். இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இதனையடுத்து நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி, ஐக்கிய அரபு அமீரகத்துடன் மோதியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 207 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சைம் அயூப் 69 ரன்னும், ஹசன் நவாஸ் 56 ரன்னும் எடுத்தனர். ஐக்கிய அரபு அமீரகம் தரப்பில் ஜூனைத் சித்திக், ஜாகிர்கான் தலா 3 விக்கெட்டும், ஹைதர் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய யுஏஇ அணியில் ஆசிப் கான் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முழுமையாக விளையாடியும் யுஏஇ அணியால் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

யுஏஇ தரப்பில் ஆசிப் கான் 77 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். சைம் அயூப் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்