அதுவரை விராட், ரோகித் விளையாடினால் கிரிக்கெட்டுக்கு நல்லது - ஆஸி.வீரர்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா விளையாட உள்ளனர்.;
image courtesy:PTI
பெர்த்,
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. அதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 19-ந்தேதி பெர்த்தில் நடக்கிறது. இதனையொட்டி இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தொடரில் இந்திய அணி புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் களமிறங்க உள்ளது. அவரது தலைமையில் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா களமிறங்க உள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்ட இருவரும் ஏறக்குறைய 7 மாதம் கழித்து மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பி இருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் மற்றும் ரோகித் சர்மாவுக்கு இது கடைசி சர்வதேச தொடராக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் தங்களது கெரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இருவரும் 2027 உலகக்கோப்பை வரை விளையாட வேண்டும் என்பதே அவர்களுடைய கனவாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.
ஆனால் அதற்கு முன் அவர்களை கழற்றி விட இந்திய அணி நிர்வாகம் தயாராகியுள்ளது. அதனாலேயே ரோகித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சிறந்த வீரர்கள் என்று ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பாராட்டியுள்ளார். எனவே 2027 உலகக்கோப்பையில் அவர்கள் விளையாடினால் அது கிரிக்கெட்டுக்கு நல்லது என்றும் ஹெட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “அவர்கள் (விராட் மற்றும் ரோகித்) இந்தியாவிற்கு அற்புதமாக இருந்துள்ளனர். என்னை விட அவர்களைப் பற்றி அக்சர் அதிகமாக பேச முடியும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் தரமான வீரர்கள், இரண்டு சிறந்த வெள்ளை பந்து வீரர்கள். விராட் அநேகமாக சிறந்த வெள்ளை பந்து வீரர். ரோகித் சர்மாவும் அதிகம் பின்தங்கியிருக்க வாய்ப்பில்லை.
இதே வடிவத்தில் ரோகித் சர்மா ஓப்பனிங்கில் வெளிப்படுத்தக்கூடிய ஆட்டத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அவர்கள் ஏதோ ஒரு கட்டத்தில் இல்லாமல் போவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இருவரும் 2027 உலகக்கோப்பை வரை தொடர்வார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் அதுவரை விளையாடினால் கிரிக்கெட்டுக்கு நல்லது” என்று கூறினார்.