டெல்லிக்கு எதிரான வெற்றி: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியது என்ன..?

டெல்லிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை வெற்றி பெற்றது.;

Update:2025-04-14 17:27 IST

image courtesy:PTI

புதுடெல்லி,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 89 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் கரண் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கரண் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

6-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி, டெல்லியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட்டு 2-வது வெற்றியை தனதாக்கியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

இந்நிலையில் இந்த போட்டியில் பெற்ற வெற்றிக்கான காரணம் குறித்து மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அளித்த பேட்டியில், "வெற்றி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இது போன்ற வெற்றிகள். கருண் நாயர் அற்புதமாக பேட்டிங் செய்தார். அதனால் வெற்றி எங்களது கையை விட்டுப்போவது போல் தோன்றியது. இருப்பினும் கரண் சர்மா சிறந்த போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார். வெறும் 60 மீட்டர் பவுண்டரிகள் கொண்ட இந்த மைதானத்தில் தைரியமாக பந்து வீசினார்.

 பார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை எதிர்கொள்ள விரும்பியதால் எனது பேட்டிங் இடத்தை மாற்றிக் கொண்டுள்ளேன். பனி இரவு நேரத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதும் வெற்றியை விடாமல் தொடர்ந்து போராட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஓரிரு விக்கெட்டுகள் ஆட்டத்தை மாற்றும் என்பது எங்களுக்குத் தெரியும். இது எனக்கும் முன்பு நடந்துள்ளது. இது போன்ற வெற்றிகள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றும் தன்மை கொண்டது" என்று கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்