அந்த நாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவேன் என்று விராட் கோலி சொன்னார் - ஆர்சிபி இளம் வீரர் பகிர்ந்த தகவல்

ஐ.பி.எல். தொடரில் விராட் கோலி 18 ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார்.;

Update:2025-08-23 16:12 IST

image courtesy:PTI

பெங்களூரு,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற்றது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.

ஐ.பி.எல். அறிமுகம் ஆன 2008-ம் ஆண்டில் இருந்து விராட் கோலி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர்.சி.பி.) அணிக்காக விளையாடி வருகிறார். ஒவ்வொரு சீசனிலும் கணிசமாக ரன் குவிக்கும் கோலிக்கு முதல் 17 ஆண்டுகளில் ஒரு கோப்பையை கூட வெல்லாதது ஏமாற்றமாக அமைந்தது. இதனால் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

இந்த 18 ஆண்டு கால ஏக்கம் இந்த சீசனோடு தணிந்தது. இந்த வெற்றியை கண்ணீர் விட்டு விராட் கோலி வெளிப்படுத்தினார். ஐ.பி.எல். தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ள விராட் கோலி ஓய்வு பெறும் வரை ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளார்.

அந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டை பொறுத்தவரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார். அதுவும் எதுவரை என்று தெரியவில்லை. 2027 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் அவரது கடைசி சர்வதேச தொடராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும் நல்ல பிட்னசை கொண்டுள்ள அவர் ஐ.பி.எல். தொடரில் சில காலம் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் பிட்டாக இருக்கும் வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று விராட் கோலி தம்மிடம் சொன்னதாக ஆர்சிபி இளம் வீரர் ஸ்வஸ்திக் சிகாரா கூறியுள்ளார். எப்போது இம்பேக்ட் வீரராக களமிறங்கும் சூழ்நிலை வருகிறதோ அந்த நாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெறுவேன் என்று விராட் கோலி சொன்னதாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “ விராட் கோலி என்னிடம், ‘நான் முழுமையாக பிட்டாக இருக்கும் வரை கிரிக்கெட் விளையாடுவேன். நான் இம்பேக்ட் பிளேயராக விளையாட மாட்டேன். நான் ஒரு சிங்கம் போல விளையாடுவேன். நான் முழு 20 ஓவர்களுக்கும் பீல்டிங் செய்துவிட்டு பின்னர் பேட்டிங் செய்வேன். நான் இம்பேக்ட் பிளேயராக விளையாட வேண்டிய நாளில், கிரிக்கெட்டை விட்டுவிடுவேன்’ என்று சொன்னார்” என ஸ்வஸ்திக் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்