இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா..? 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
டெஸ்ட் தொடரை சமனுக்கு கொண்டு வரும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது.;
மான்செஸ்டர்,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட போட்டி மான்செஸ்டரில் உள்ள ஒல்டு டிராப்போர்டில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக லார்ட்சில் நடைபெற்ற பரபரப்பான 3-வது போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகில் வந்து தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி பெற 193 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என்று நினைத்தனர். ஆனால் இங்கிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இந்தியாவை 170 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்கி திரில் வெற்றி பெற்றது.
முதலாவது இன்னிங்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுலின் சதத்துக்காக அவசரப்பட்டு ஓடி ரன்-அவுட் ஆனதன் விளைவு அணி முன்னிலை பெறுவதை தடுத்து விட்டது. அது தான் அந்த டெஸ்டில் திருப்புமுனை. அதை உணர்ந்துள்ள இந்திய வீரர்கள் இது போன்ற தவறுகளை இனி செய்யமாட்டார்கள் என நம்பலாம்.
இதே போல் தொடர் முழுவதும் ஸ்லிப் கேட்ச் செய்வதில் நமது வீரர்கள் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. இதையடுத்து பயிற்சியின் போது ஸ்லிப் கேட்ச்சுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய கருண் நாயரின் ஆட்டம் மெச்சும்படி இல்லை. 6 இன்னிங்சில் ஆடி ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதனால் அவருக்கு பதிலாக சாய் சுதர்சனை சேர்ப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் பேட்டிங்கும் சீராக இல்லை. கடந்த டெஸ்டில் இரு இன்னிங்சிலும் (13 மற்றும் 0) ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் வீழ்ந்தார். அணி வலுவான நிலையை எட்ட அவர் நல்ல அடித்தளம் அமைத்து தர வேண்டியது அவசியமாகும். விரலில் பந்து தாக்கி காயமடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் லார்ட்ஸ் டெஸ்டில் பாதியில் வெளியேறினார். அதன் பிறகு பேட்டிங் மட்டுமே செய்தார். விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு விட்டார். இந்த டெஸ்டில் அவரே விக்கெட் கீப்பராக தொடருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஆல்-ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி கால்முட்டி காயத்தால் எஞ்சிய தொடரில் இருந்து ஏற்கனவே ஒதுங்கி விட்டார். இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்பும் ஆடமாட்டார் என கேப்டன் சுப்மன் கில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
ஆகாஷ் தீப்புக்கு பதிலாக புதுமுக வேகப்பந்து வீச்சாளர் அன்ஜூல் கம்போஜ் இடம் பெறுவதற்கு பிரகாசமான வாய்ப்புள்ளது. இருப்பினும் 'டாஸ்' போடுவதற்கு முன்பே கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா ஆகியோரில் ஒருவரை முடிவு செய்வோம் என்றும் கில் குறிப்பிட்டார்.
நிதிஷ்குமார் ரெட்டி இடத்தில் ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. மற்றபடி ஜஸ்பிரித் பும்ரா (12 விக்கெட்), முகமது சிராஜ் (13 விக்கெட்) பந்து வீச்சு தாக்குதல் தொடுக்க ஆயத்தமாக உள்ளனர். தொடரை கைப்பற்றுவதற்கான வாய்ப்பில் நீடிக்க இன்றைய டெஸ்டில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கடந்த டெஸ்டில் பெற்ற வெற்றியால் மிகுந்த நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள். இந்த போட்டியோடு தொடரை சொந்தமாக்கிவிட வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த அணியில் ஜோ ரூட் (ஒரு சதம் உள்பட 253 ரன்), விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் (415 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடம் வகிக்கும் ஜோ ரூட் இன்னும் 31 ரன்கள் எடுத்தால் ராகுல் டிராவிட், காலிஸ் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு 3-வது இடத்துக்கு வந்து விடுவார். அந்த சாதனையை இந்த டெஸ்டில் நிகழ்த்த வாய்ப்புள்ளது.
அணியில் ஒரே ஒரு மாற்றமாக காயமடைந்த பவுலர் சோயிப் பஷீருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் அழைக்கப்பட்டுள்ளார். டாசன் 8 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் அடியெடுத்து வைக்கிறார். மான்செஸ்டரில் இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிராக இதுவரை தோற்றதில்லை. 9 டெஸ்டில் விளையாடி 4-ல் வெற்றியும், 5-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த 89 ஆண்டு கால பெருமையை தக்கவைக்க தீவிரமாக உள்ளனர்.
மழை குறுக்கிட வாய்ப்பா..?
4-வது டெஸ்ட் நடக்க உள்ள மான்செஸ்டரில் அவ்வப்போது மழை பெய்கிறது. போட்டி நடக்கும் 5 நாட்களும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளது. அத்துடன் ஆடுகளமும் ஈரமாக இருப்பதால் இத்தகைய சீதோஷ்ண நிலை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். அதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை நன்கு கணித்து எச்சரிக்கையுடன் ஆட வேண்டும். இல்லாவிட்டால் தாக்குப்பிடிப்பது கடினம் தான்.
மொத்தத்தில் லார்ட்ஸ் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து மான்செஸ்டரின் மோசமான வரலாற்றை இந்திய அணி மாற்றிக்காட்டுமா அல்லது இங்கிலாந்தின் யுக்தியை சமாளிக்க முடியாமல் அடங்கி போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் விவரம்:-
இந்தியா: ஜெய்ஸ்வால், லோகேஷ் ராகுல், கருண் நாயர் அல்லது சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்குர், பும்ரா, முகமது சிராஜ், அன்ஜூல் கம்போஜ் அல்லது பிரசித் கிருஷ்ணா.
இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி சுமித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.