மகளிர் உலகக் கோப்பை: முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்கா
வோல்வார்ட் 169 ரன்களில் (20 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.;
கவுகாத்தி,
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடந்த முதலாவது அரையிறுதியில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் நாட் சிவெர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கேப்டன் லாரா வோல்வார்ட்டும், தஸ்மின் பிரிட்சும் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். நேர்த்தியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இவர்கள் அருமையான தொடக்கம் தந்தனர். இதன் பின்னர் சில விக்கெட் சரிந்தாலும் வோல்வார்ட் நிலைத்து நின்று அட்டகாசப்படுத்தினார். முந்தைய ஆட்டத்தில் சுழலில் தடுமாறிய நிலையில் இந்த முறை சுழற்பந்து வீச்சை அடித்து துவம்சம் செய்தார். அபாரமாக ஆடிய அவர் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். நாக்-அவுட் சுற்றில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற மகத்தான சாதனையையும் வசப்படுத்தினார். அவருக்கு மரிஜானே காப் (42 ரன்), குளோயி டிரையான் (33 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர்.
சதத்துக்கு பிறகும் ருத்ரதாண்டவமாடிய வோல்வார்ட், சுழற்பந்து வீச்சாளர் லின்சே சுமித்தின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் தெறிக்க விட்டார். வோல்வார்ட் 169 ரன்களில் (143 பந்து, 20 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுக்கு 319 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் 4 விக்கெட் கைப்பற்றினர்.
பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, மரிஜானே காப்பின் முதல் ஓவரிலேயே அமே ஜோன்ஸ் (0), ஹீதர் நைட் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது . டாமி பீமோன்டும் (0) ரன் கணக்கை தொடங்காமலேயே நடையை கட்டினார். ஒஇந்த சறுக்கலில் இருந்து இங்கிலாந்தால் மீள முடியவில்லை. கேப்டன் நாட் சிவெர் (64 ரன்), அலிஸ் கேப்சி (50 ரன்) ஆகியோரின் போராட்டம் தோல்வியை கொஞ்சம் நேர தள்ளிப்போட்டது அவ்வளவு தான்.
இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் தென்ஆப்பிரிக்கா 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, உலகக் கோப்பையில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.