மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று மோதல்

மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.;

Update:2025-10-30 06:24 IST

மும்பை,

இந்தியாவில் நடந்து வரும் 13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) அரங்கேறும் 2-வது அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன..

ஏற்கனவே லீக் சுற்றில் 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அதே உற்சாகத்துடன் வரிந்து கட்டும். மொத்தத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் காணும் இந்திய அணி தக்க பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் 60 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 49-ல் ஆஸ்திரேலியாவும், 11-ல் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன.

போட்டி நடைபெறும் நவிமும்பையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மழை பெய்ய லேசான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒருவேளை மழையால் ஆட்டத்தில் முடிவு கிடைக்காமல் போனால் மாற்று நாளான மறுநாளில் நடைபெறும்.

பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்