இளையோர் ஒருநாள் கிரிக்கெட்: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி 143 ரன்கள் குவித்தார்.;
image courtesy:PTI
வொர்செஸ்டர்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் 3 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி வொர்செஸ்டரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 363 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அதிரடியில் கலக்கிய சூர்யவன்ஷி வெறும் 78 பந்துகளில் 143 ரன்களும், மல்ஹோத்ரா 129 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேக் ஹொம் 4 விக்கெட்டுகளும், செபாஸ்டியன் மோர்கன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 364 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்கி உள்ளது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி வெறும் 52 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் இளையோர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.