சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி - அடுத்த மாதம் 6-ந் தேதி தொடக்கம்
மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 20 வீரர், வீரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.;
கோப்புப்படம்
சென்னை,
3-வது சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஹயாத் ரீஜென்சி ஓட்டலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 6-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரு பிரிவாக நடைபெறும் இந்த போட்டியில் மொத்தம் 20 வீரர், வீரங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். சேலஞ்சர்ஸ் பிரிவில் கார்த்திகேயன் முரளி, ஆர்.வைஷாலி, ஹரிகா, இனியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.25 லட்சமும், 2-வது, 3-வது இடம் பெறுபவர்களுக்கு முறையே ரூ.15 லட்சமும், ரூ.10 லட்சமும் பரிசாக வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவருக்கு ரூ.7 லட்சம் பரிசுத் தொகையாக கிடைக்கும். அத்துடன் அவர் அடுத்த ஆண்டு (2026) நடைபெறும் போட்டியில் மாஸ்டர்ஸ் பிரிவுக்கு ஏற்றம் பெறுவார்.
இந்த போட்டியை நேரில் காண்பதற்கான டிக்கெட்டுகளை BookMyShow என்ற இணையதளம் வாயிலாக பெறலாம். டிக்கெட்டின் தொடக்க விலை ரூ.750 ஆகும். வி.ஐ.பி. டிக்கெட் விலை ரூ.3,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.