நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி பெங்களூருக்கு மாற்றம் - காரணம் என்ன..?
இந்த போட்டிக்கு ‘ஏ’ பிரிவு அந்தஸ்தை உலக தடகள சம்மேளனம் வழங்கி இருக்கிறது.;
Image Courtesy: PTI
புதுடெல்லி,
ஒலிம்பிக்கில் 2020-ம் ஆண்டு தங்கப்பதக்கமும், 2024-ம் ஆண்டு வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தவரும், நடப்பு உலக சாம்பியனுமான இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நீரஜ் சோப்ரா மற்றும் ஜெ.எஸ்.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் மற்றும் உலக தடகள சம்மேளனம் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த போட்டிக்கு 'ஏ' பிரிவு அந்தஸ்தை உலக தடகள சம்மேளனம் வழங்கி இருக்கிறது. முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இந்த சர்வதேச போட்டி நீரஜ் சோப்ராவின் சொந்த மாநிலமான அரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் அடுத்த மாதம் (மே) 24-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பஞ்ச்குலா மைதானத்தில் சர்வதேச தடகள போட்டியை நடத்துவதற்கு தேவையான மின்னொளி வசதி இல்லை. குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் அதனை செய்வது கடினம் என்பதால் இந்த போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள்.