செயின்ட் லூயிஸ் செஸ் போட்டி: இந்திய வீரர் குகேசுக்கு 6-வது இடம்
அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய பிளிட்ஸ் வடிவிலான போட்டி கடந்த இரு நாட்கள் நடந்தன.;
செயின்ட் லூயிஸ்,
கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமான செயின்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிளிட்ஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், அமெரிக்காவின் பாபியானோ கருனா, லெவோன் அரோனியன் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றனர். இதில் உலக சாம்பியனான தமிழகத்தை சேர்ந்த டி. குகேஷ் ரேபிட் பிரிவில் 4 வெற்றி, 2 டிரா, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்தை பெற்றார். இதைத் தொடர்ந்து அதிவேகமாக காய்களை நகர்த்தக்கூடிய பிளிட்ஸ் வடிவிலான போட்டி கடந்த இரு நாட்கள் நடந்தன.
இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த ஆட்டம் ஒன்றில் வெள்ளைநிற காய்களுடன் ஆடிய குகேஷ் 46-வது நகர்த்தலில் நோடிர்பெக் அப்துசத்தோரோவை (உஸ்பெகிஸ்தான்) தோற்கடித்தார். தொடர்ந்து அமெரிக்காவின் லீனியர் டோமின்குஸ் பெரெஸ், பாபியானோ கருனாவிடம் தோல்வியை தழுவினார். கடைசி 3 ஆட்டங்களில் லீம் லி (வியட்நாம்), மேக்சிம் வச்சியர் லக்ரேவ் (பிரான்ஸ்), கிரிகோரி ஓபரின் (அமெரிக்கா) ஆகியோருடன் டிரா செய்தார். பிளிட்ஸ் பந்தய முடிவில் குகேஷ் 4 வெற்றி, 6 தோல்வி, 8 டிரா என 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்தார்.
ரேபிட், பிளிட்ஸ் என இரு போட்டிகளின் முடிவில் ஒட்டுமொத்தத்தில் லெவோன் அரோனியன் 24½ புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். பாபியானோ கருனா 21½ புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். குகேஷ் 18 புள்ளிகளுடன் லீன் லியுடன் 6-வது இடத்தையும் பகிர்ந்தார்.