விமானங்களிலும் தடையின்றி இணையதள சேவை!
இந்தியாவில் இப்போது இணையதள பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது
விண்வெளி ஆராய்ச்சியில் இப்போது இந்தியா மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு வித்திட்டவர் மறைந்த விஞ்ஞானி விக்ரம் சாராபாய்தான். 1968-ம் ஆண்டு அவரும், விஞ்ஞானி சதீஷ் தவானும் இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை (இஸ்ரோ) தொடங்க முயற்சி மேற்கொண்டு ஆந்திர அரசாங்கத்தை அணுகினார்கள். ஆந்திர மாநில அரசாங்கம், அவர்களை வரவேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, விண்வெளி ஆய்வு மையத்துக்காக ஸ்ரீஹரிகோட்டா தீவையே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திடம் ஒப்படைத்தது.
அங்கு ராக்கெட் வேகத்தில் விண்வெளி மையமும், ஏவுதளமும் அமைக்கப்பட்டு 1969-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி ஆர்யபட்டா என்ற முதல் ராக்கெட் சோவியத் ரஷியாவால் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அன்று முதல் இன்று வரை 34 நாடுகளுக்கு சொந்தமான 432 செயற்கைக்கோள்கள் 97 ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளன. தற்சமயம் இந்தியாவுக்கு சொந்தமான 20 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு அதிகமான செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு இருந்தாலும், பல செயற்கைக்கோள்கள் தங்களின் அதிகபட்ச ஆயுள் காலமான 5 ஆண்டுகளை முடித்து செயலிழந்துவிட்டன. நம்மிடம் உள்ள ராக்கெட்டுகளின் அதிகபட்ச திறன் 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ முடியும்.
இந்தியாவில் இப்போது இணையதள பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், மலைக்கிராமங்கள், தீவுகள், வனப்பகுதிகள், சில கிராமப்பகுதிகளில் இணையதள வசதி இல்லை. செல்போன் கோபுரங்கள் இல்லாத, 'பிராட் பேண்டு' கேபிள்கள் கொண்டு செல்லமுடியாத இடங்களுக்கு, செயற்கைக்கோள் மூலம் இணையதள வசதி கொடுப்பதற்காக 'ஜிசாட் 20' செயற்கைக்கோளை மத்திய அரசாங்கம் வடிவமைத்திருந்தது. இதன் எடை 4,700 கிலோ என்பதால், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இதை விண்ணில் ஏவ முடியாது. எனவே, உலக பணக்காரரான எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் 'பால்கான் 9' என்ற ராக்கெட் மூலம் அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.500 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளின் ஆயுள் காலம் 14 ஆண்டுகள் என்பது மிகவும் சிறப்புக்குரியது.
விண்ணில் நிறுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் முழுமையாக செயல்பட இன்னும் 2 மாதங்கள் ஆகும். அதற்கு பிறகு இந்தியா முழுவதும் மூலை முட்டுக்கெல்லாம் தடையின்றி அதிவேக இணையதள சேவை கிடைக்கும். குறிப்பாக, இந்திய வான் பரப்பில் பறக்கும் அனைத்து விமானங்களுக்கும், ஏன் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பல்களுக்கும் கூட இணையதள வசதி கிடைக்கும். விசைப்படகுகளில் ஆழ்கடலில் சென்று மீன்பிடிக்கும் மீனவர்களும் இதன் மூலம் எல்லைகளை துல்லியமாக கண்டறியும் தொழில்நுட்பமும் புகுத்தப்பட்டால், நீண்டகால பிரச்சினையும் முடிவுக்கு வரும். மொத்தத்தில், இது நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.
எதிர்காலத்தில் இதுபோல 4 ஆயிரம் கிலோவுக்கும் அதிக எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த வாய்ப்பு இருப்பதால், இதுபோல வெளிநாட்டு ராக்கெட்டுகளை நம்பியிருக்காமல் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்தே செலுத்தும் வகையில் அடுத்த தலைமுறைக்கான ராக்கெட்டில் 12 ஆயிரம் கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை அனுப்ப முடியும் அளவில் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதள திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.