மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு


மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது.

இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 26ம் தேதி 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் எஞ்சிய 14 தொகுதிகளுக்கு வரும் 7ம் தேதி 2ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்மாநிலத்தின் பகல்கோட் பகுதியில் இன்று பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது,

இந்தியாவை உலகின் 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே எங்கள் நோக்கம். இந்தியாவை உற்பத்தி, திறன் மையங்களாக மாற்ற நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த நோக்கத்தை சுற்றுலா செல்பவர்களால் நிறைவேற்ற முடியாது.

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாங்கம் நடத்தவில்லை. வசூல் ராஜாங்கம் நடத்துகிறது. 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிறகு வறுமையை ஒற்றை நடவடிக்கையில் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவோம் என்று காங்கிரஸ் கூறுகிறது.

கர்நாடக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை வெகுதொலைவில் இல்லை. வாக்கு வங்கிக்காக பங்கரவாத, அடிப்படைவாதிகளை காங்கிரஸ் பாதுகாக்கிறது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது அவர்களின் தேர்தல் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர். போலி வீடியோக்கள் குறித்து போலீசாரிடமும், எனது கட்சி நிர்வாகிகளிடமும் கூறியுள்ளேன். வீடியோ பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story