பிரதமர் மோடியை வேடந்தாங்கல் பறவை என விமர்சிப்பதா? - மு.க.ஸ்டாலினுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி பா.ஜ.க. வேட்பாளர் நரசிம்மனை ஆதரித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஓசூரில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
வெயில் கொளுத்துகின்ற நேரத்தில் அதனை தாங்கிக்கொண்டும், வேலை நாட்களிலும் எங்களின் உரையை கேட்க இவ்வளவு பேர் வந்திருப்பதால் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் 2 நாட்களில் புதிய வருடம் பிறக்கிறது. மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று உங்கள் முன்பு பேச வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
வருகின்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வெற்றிபெற செய்ய வேண்டும்.தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரியில் தொழில் வளர்ச்சி பெருகி உள்ளது. தமிழ்நாட்டில் ராணுவ தளவாடம் கொண்டு வந்ததால் பல நன்மைகள் கிடைத்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது 2.75 லட்சம் குடும்பத்திற்கு குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் 2.5 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பறவைகள் வருவதுபோல பிரதமர் மோடி சீசன் காலத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம். அந்த வார்த்தையை பயன்படுத்துவதே தவறு. தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. போதைப் பொருட்கள் மூலம் கோடிக்கணக்கான பணத்தை திமுக சம்பாதித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் திமுக குடும்பத்துடன் தொடர்பு வைத்துள்ளதற்கு நிறைய "ஆதாரம்" இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.