86 ஆண்டுகளுக்குபின் கண்டறிந்த பறவை இனம் ஜெர்டான்ஸ் கோர்சர்

உலகிலேயே மிகவும் அரிதான பறவை இனங்களுள் ஜெர்டான்ஸ் கோர்சரும் ஒன்று.
உலகிலேயே மிகவும் அரிதான பறவை இனங்களுள் ஜெர்டான்ஸ் கோர்சரும் ஒன்று. அழிந்து போய்விட்டதாகக் கருதப்பட்டு 1986-ல் ஆந்திர மாநிலத்தின் கடப்பா பகுதியில் ஜெர்டான்ஸ் கோர்சர் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பறவைகள், கோர்சர் என அழைக்கப்படும் ஒரு பறவை இனத்தைச் சேர்ந்தது. தெலுங்கில் இதற்கு 'கலுவிக் கோடி' என்று பெயர். ஆள்காட்டிப் பறவைகள் இனத்தை சேர்ந்தது.
இந்த கோர்சர் பறவைகள் நன்றாகப் பறக்கக் கூடியவை என்றாலும் அதிகம் நடந்தும் செல்லக்கூடியவை. இரவில் நடமாடும் பறவை. இந்தப் பறவை குறித்து முதலில் விவரித்தது டி.சி. ஜெர்டான் என்ற ஆங்கிலேய பறவையியலாளர்தான். அதனால் அவர் பெயரையே அந்த பறவை இனத்துக்கும் வைத்திருக்கிறார்கள்.
1900-ம் ஆண்டு வாக்கில் பார்த்திருக்கிறார்கள். அந்தப் பறவை இனம் கடைசியாகப் பார்க்கப்பட்டு பதிவு செய்தது அப்போதுதான். அதற்குப் பிறகு 86 ஆண்டுகள் கழித்துதான் அந்தப் பறவையை மறுபடியும் பார்த்து பதிவு செய்துள்ளார்கள்.
1986-ல் அந்தப் பறவை இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னும் 2000-ம் ஆண்டு வரை அது குறித்து ஆராய்ச்சி எதுவும் பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. புதர்கள், அவற்றையொட்டி திறந்தவெளி, இப்படி இருக்கும் பகுதிகளில் மட்டும்தான் அந்தப் பறவைகள் இருக்கும். பகல் முழுவதும் புதர்களில் இருந்துவிட்டு இரவு நேரங்களில் திறந்தவெளிக்கு வந்து எறும்புகள், கரையான்கள், பூச்சிகள் போன்றவற்றை உண்ணும்.
டார்ச் அடித்தால் அந்தப் பறவை அப்படியே தரையோடு தரையாக உட்கார்ந்துகொள்ளும். பார்ப்பதற்குக் கல் கிடப்பதைப் போல இருக்கும். அருகே போனால் மேலே பறந்து சென்றுவிடும்.