ஜி.எஸ்.டி.–கேளிக்கை வரியை எதிர்த்து டைரக்டர் டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி.–கேளிக்கை வரியை எதிர்த்து டைரக்டர் டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2017 4:15 AM IST (Updated: 5 July 2017 2:26 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. மற்றும் கேளிக்கை வரியை கண்டித்து டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

சென்னை,

திரைப்படங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும், தமிழக அரசு விதித்துள்ள 30 சதவீத கேளிக்கை வரியையும் எதிர்த்து லட்சிய தி.மு.க. தலைவரும், சினிமா டைரக்டருமான டி.ராஜேந்தர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை எதிரில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தயாரிப்பாளர்கள் மோகன் நடராஜன், சுரேஷ் காமாட்சி, பி.டி.செல்வகுமார், பிரிமுஸ்தாஸ், சவுந்தர், தம்பிதுரை, அமீர், எஸ்.ராஜா உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அனைவரும் கருப்பு கொடியுடன் திரண்டு ஜி.எஸ்.டி., கேளிக்கை வரிகளுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் டி.ராஜேந்தர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–

‘‘திரைப்படங்களுக்கு இரட்டை வரி விதித்து இருப்பதால் தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். 28 சதவீத ஜி.எஸ்.டி. வரியையும், 30 சதவீத கேளிக்கை வரியையும் எங்களால் செலுத்த முடியாது. தமிழகம் முழுவதும் இந்த வரி விதிப்புக்கு எதிராக திரையரங்கு உரிமையாளர்கள் தியேட்டர்களை மூடி இருக்கிறார்கள்.

இதனால் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்த படங்களின் தயாரிப்பாளர்கள் வேதனையில் தவிக்கிறார்கள். தியேட்டர்கள் மூடப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது. 10 நாட்கள் தியேட்டர்களை மூடினால் குற்றங்கள் பெருகி சட்டம் ஒழுங்கு கெட்டு விடும். பல மாநிலங்கள் கேளிக்கை வரியில் இருந்து திரைப்படத்துறைக்கு விலக்கு அளித்து உள்ளன.

தமிழக அரசும் கேளிக்கை வரியை ரத்துசெய்து திரைப்படத்தொழிலை காப்பாற்ற வேண்டும். வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் அனுமதி மறுத்ததால் திரைப்பட வர்த்தக சபை முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளேன். இதற்காக போலீசார் என்னை கைது செய்தாலும் கவலை இல்லை’’.  இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.


Next Story