சினிமா செய்திகள்

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை திருமண மண்டபம் கட்ட வழங்கினார் + "||" + Actors Association building funding Ishari Ganesh Rs 1 crore donation

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை திருமண மண்டபம் கட்ட வழங்கினார்

நடிகர் சங்க கட்டிட நிதிக்கு ஐசரி கணேஷ் ரூ.1 கோடி நன்கொடை திருமண மண்டபம் கட்ட வழங்கினார்
நடிகர் சங்க கட்டிடத்தில் மறைந்த நடிகர் ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள திருமண மண்டபத்திற்கு முன் தொகையாக ரூ.1 கோடியை ஐசரி கணேஷ் வழங்கினார்.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை தியாகராய நகரில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தரை தளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் அமைய உள்ளது. ரூ.30 கோடிக்கும் அதிகமான செலவில் இந்த கட்டிடத்தை கட்டுகின்றனர். நடிகர் சங்க அலுவலகம் உடற் பயிற்சி கூடம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் உள்ளிட்டவை இந்த கட்டிட வளாகத்தில் அமைய உள்ளன. கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.


வருகிற ஜூன் அல்லது ஜூலை மாதம் கட்டுமான பணிகள் முடிவடைந்து நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கட்டிடத்தில் ரூ.2 கோடி செலவில் ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள மினி திருமண மண்டபத்திற்கான முழு செலவையும் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் ஏற்றுள்ளார். இதற்கான முன் தொகையாக ரூ.1 கோடியை நேற்று வழங்கினார்.

இது குறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான .ஐசரி கணேஷ் நடிகர் சங்கத்தின் 62-ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான ஐசரி வேலன் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டுமான செலவுத்தொகை அனைத்தையும் அவரே ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்.

எனவே அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1 கோடியை நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ஐசரி கணேஷ் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.