ராஜசேகர ரெட்டி வேடம்: நடிகர் மம்முட்டி மகிழ்ச்சி
ராஜசேகர ரெட்டி வேடத்தில் நடித்தது தனக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதாக நடிகர் மம்முட்டி கூறினார்.
மறைந்த ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை ‘யாத்ரா’ என்ற பெயரில் தெலுங்கில் படமாக தயாராகி உள்ளது. இதில் ராஜசேகர ரெட்டி வேடத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். ராவ் ரமேஷ், ஜெகபதி பாபு, சுஹாசினி, போசனி கிருஷ்ணமுரளி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். மகி வி.ராகவ் இயக்கி உள்ளார்.
விவசாயிகளின் குறைகளை கேட்க 2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி நடத்திய பாதயாத்திரை ஆந்திர அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த யாத்திரை அவரை 2004-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு அவர் மறைவதுவரை அசைக்க முடியாத தலைவராக மாற்றியது.
இதனை படத்தில் முக்கிய காட்சிகளாக வைத்துள்ளனர். மேலும் பல உண்மை சம்பவங்களும் படத்தில் இடம்பெறுகிறது. மம்முட்டி வேடம் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக அவரை பாராட்டுகிறார்கள். படத்தின் முதல் தோற்றமும், டிரெய்லரும் வெளியாகி ஆந்திர மக்கள் மத்தியில் படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது சமர என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இதில் ராஜசேகர ரெட்டியின் பெருமைகளை கூறி இருக்கிறார்கள். படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் நடித்தது பெருமையான அனுபவம் என்று மம்முட்டி மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story