இளையராஜாவுக்கு பாராட்டு விழா சினிமா படப்பிடிப்புகள் 2 நாள் ரத்து


இளையராஜாவுக்கு பாராட்டு விழா சினிமா படப்பிடிப்புகள் 2 நாள் ரத்து
x
தினத்தந்தி 1 Feb 2019 4:45 AM IST (Updated: 31 Jan 2019 11:06 PM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடப்பதையொட்டி 2 மற்றும் 3-ந்தேதிகளில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்டவும் இசையமைப்பாளர் இளையராஜாவின் திரையுலக சாதனைகளை பாராட்டவும் ’இளையராஜா 75‘ என்ற பெயரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளையும் (2-ந்தேதி) நாளை மறுநாளும் கலைவிழா நடக்க உள்ளது. தயாரிப்பாளர் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.

நாளைய நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள நடிகர் நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.

கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகைகள் பூர்ணா, ரூபினி, சுனைனா, மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, வேதிகா, சாயிஷா, இனியா, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் மற்றும் முன்னா, டேனி, டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஆகியோர் நடனம் ஆடுகிறார்கள். ரோபோ சங்கர், யோகிபாபு, சதீஷ், கோவை சரளா ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சியும் நடக்கிறது. 3-ந்தேதி இளையராஜாவின் இசை கச்சேரி நடக்கிறது.

விழாவையொட்டி 2 (நாளை) மற்றும் 3-ந்தேதிகளில் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகின்றன. இந்த இசை நிகழ்ச்சி மூலம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ரூ.10 கோடி நிதி திரட்டவும் அதை நலிந்த தயாரிப்பாளர்களுக்கு வீடு கட்ட நிலம் வாங்குவது உள்ளிட்ட நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

Next Story