எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகிய தங்கவேல்
எனக்கு நினைவு தெரிந்து, தங்கவேல் நடித்து நான் பார்த்த முதல் படம் ‘கல்யாணப் பரிசு.’ அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் பார்த்தேன்.
மிகை நடிப்பு இல்லாமல், மிகவும் இயற்கையாக நடிக்கக்கூடிய நடிகர், தங்கவேல். மூக்கு, கிளி மூக்கு போல் இருக்கும். இதுபோன்ற மூக்கு அமைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும், மிகவும் தந்திரமாகவும் சதி வேலைகள் செய்பவராகவும் இருப்பார்கள் என்று கூறுவார்கள்.
ஆனால் தங்கவேல் மிகவும் நல்லவர். வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர். எனவே தான் யாரைப் பார்த்தாலும் ‘வாழ்க வளமுடன்’ என்று கூறுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். பாசிட்டிவ் எனர்ஜி என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவர். இன்றைக்கு விஞ்ஞானிகள் பாசிட்டிவ் எனர்ஜியை எல்லாம் ஆராய்ச்சி செய்து உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே கடைப்பிடித்தவர் நடிகர் தங்கவேல்.
அவரது முகமும், நடை, உடை, பாவனைகளும், நடிப்பும், நடிகர் சாரங்கபாணியைப் போல் இருக்கும். சாரங்கபாணியின் நடிப்பையோ, பாவனைகளையோ, தங்கவேல் காப்பி அடிக்கவில்லை. இருந்தாலும் இருவருக்குள்ளும் அப்படி ஒரு ஒற்றுமை இருந்தது. தங்கவேலை நான் சில முறை சந்தித்திருக்கிறேன். என்னுடைய திருமணப் பத்திரிகையை அவரிடம் கொடுக்கும் போது, அதிகமாக உரையாடியிருக்கிறேன். இரண்டு, மூன்று விழாக்களிலும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த சமயங்களில் எல்லாம், நான் அவரிடம் அந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாடக வாழ்க்கை, கலைவாணர், எம்.ஜி.ஆர். போன்றவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் போன்றவற்றைப் பற்றி அதிகம் கேட்டறிந்தேன். அதில் எனக்கு பல செய்திகள் கிடைத்தது.
எம்.ஜி.ஆரைவிட சரியாக இரண்டு வயது இளையவர், நடிகர் தங்கவேல். எம்.ஜி.ஆரும், தங்கவேலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் அப்பொழுது சென்னையில் உள்ள யானைக் கவுனி என்ற இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். ஒருநாள் மந்தைவெளியில் இருந்த கபாலி தியேட்டருக்கு எம்.ஜி.ஆரும், தங்கவேலும் சென்றனர். அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதற்காக இரவுக் காட்சிக்குச் சென்றிருந்தனர்.
அப்பொழுது சென்னையில் டிராம் வண்டி தான் ஓடிக்கொண்டிருந்தது. படம் விட்டு வெளியில் வந்த இருவரும், டிராம் வண்டியில் பயணம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் முடியவில்லை. எனவே ‘நடந்தே யானைக் கவுனிக்குப் போவோம்’ என்று முடிவெடுத்து, இருவரும் மந்தைவெளியில் இருந்து நடக்கத் தொடங்கினர்.
அப்போது ஆழ்வார்பேட்டையில் நான்கு ரோடும் சந்திக்கும் இடத்தில் ஒரு பஸ் ஸ்டாப் இருந்தது. மயிலாப்பூருக்குப் போகிறவர்கள், அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று தான் ஏறுவார்கள். அதற்கு முன்பாக ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். பின்னாட்களில் நான் சென்னை வந்த சமயம், அங்கு ஒரு ரவுண்டானா இருந்தது. மேம்பாலம் எல்லாம் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.
ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அந்த இடத்திற்கு வந்ததும், தங்கவேலிடம் எம்.ஜி.ஆர். ஓர் யோசனையை சொல்லியிருக்கிறார். “தங்கவேல்! பேசாமல் இந்த இடத்தில் இரண்டு, மூன்று மணி நேரம் படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் எழுந்து முதல் டிராம் வண்டியைப் பிடித்து யானைக் கவுனிக்குப் போய் விடுவோம்” என்று கூற, “எந்த இடத்தில் படுப்பது?” என்று கேட்டிருக்கிறார் தங்கவேல்.
அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பைக் காட்டி, “இந்த இடத்தில் படுப்போம்” என்று சொல்லி இருக்கிறார், எம்.ஜி.ஆர்.
உடனே தங்கவேல், “தூங்கும் பொழுது போலீஸ் வந்து தொந்தரவு செய்வார்களே?” என்று தயங்க, “வந்தால் பார்த்துக் கொள்வோம். நாமென்ன திருடர்களா?, கொலை செய்தவர்களா?, நம்மகிட்ட தான் கபாலி தியேட்டர் டிக்கெட் இருக்கே. அப்படியே வந்து கேட்டால், டிக்கெட்டை காண்பிப்போம்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.
அதன் பின்னர் கையில் இருந்த நாளிதழை, பஸ் ஸ்டாப்பில் உள்ள தரையில் விரித்து இருவரும் படுத்தனர். அப்போது தங்கவேல், எம்.ஜி.ஆரிடம் “அண்ணே! நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?” என்று கேட்டார்.
உடனே எம்.ஜி.ஆர்., ஆழ்வார்பேட்டை ரோட்டில் அடித்து, “தங்கவேல்! நான் ஒரு நாள் இந்த நாட்டை ஆளுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.
இந்த விஷயத்தை நான் தங்கவேலை சந்தித்தபோது ஒரு முறை என்னிடம் சொன்னார். “எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னபடியே நாட்டை ஆண்டு விட்டார் ராஜேஷ். நான் கூட முதலில் பி.யூ.சின்னப்பா போல் சினிமாவை ஆளப் போகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் பின்னாளில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் தான், அவர் ரோட்டில் அடித்து சத்தியம் செய்ததன் உண்மை நிலையை உணர்ந்து கொண்டேன்” என்றார்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த இடத்தைத் தாண்டிப்போகும் போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆர். படுத்திருந்ததுதான் நினைவிற்கு வரும்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என் மீது அன்பு வைத்துப் பழகியது, தங்கவேலுக்குத் தெரியும். எனவே தான் அந்த கால விஷயங்கள் பலவற்றை என்னிடம் சுவைபடக் கூறுவார். மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியர், கதை சொல்வதைப் போல விஷயங்களை விவரிப்பார். அவர் சொல்லுகின்ற விதம், நம் கண்முன்னே காட்சிகளாகத் தெரியும். வளவளவென்று அனாவசியமாக வார்த்தைகளைப் போட்டு பேசமாட்டார். மிக சுருக்கமாக சொல்லுவார்.
இன்னொரு முறை தங்கவேலை, நான் சந்திக்கும் போது, “பாசிட்டிவ் எனர்ஜியில் உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளதாமே, அது உண்மையா?” என்று கேட்டேன்.
அதற்கு அவர், “அதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்கை உள்ளது ராஜேஷ். உதாரணமாக, எதிர்மறையான ஒரு விஷயத்தையோ அல்லது எதிர்மறை வார்த்தைகளையோ நாம் உச்சரிக்கும்போது அந்த இடத்தில் எதிர்மறை எனர்ஜி பரவி அந்த விஷயத்தை உண்மையாக்கி விடும். ஒரு பகுதியில் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் ‘மழை வராது’ என்ற எதிர்மறை வார்த்தைைய பயன்படுத்தினார்கள் என்றால், அந்த இடத்தில் மழை பெய்யாமலேயே போய்விடும்” என்று கூறினார்.
அன்று அவர் சொல்லும் பொழுது அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தற்பொழுது அதை விஞ்ஞானத்தில் நிரூபித்து இருக்கிறார்கள்.
டாக்டர் இமோட்டே என்பவர், பாசிட்டிவ் எனர்ஜியை விஞ்ஞானப் பூர்வமாக உண்மை என்று சொல்லி இருக்கிறார். “அன்பும், நன்றியும் உள்ளவர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் இருக்கும். அவர்களை மக்கள் மிகவும் விரும்புவார்கள்; நம்புவார்கள். அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.
அதை ஒரு ஆய்வு மூலமாகவும் அவர் நிரூபித்தார். இரண்டு டம்ளரில் ஊற்றிய ஒரே தண்ணீருக்குள், ஒரு டம்ளருக்குள் அன்பு என்றும், இன்னொரு டம்ளருக்குள் வெறுப்பு என்றும் எழுதி வைத்தார். 5 மணி நேரம் கழித்து விஞ்ஞானக் கூடத்தில் வைத்து இரண்டு டம்ளரில் உள்ள நீரையும் பரிசோதனை செய்தார். ‘அன்பு’ என்று எழுதி வைத்த டம்ளருக்குள் இருந்த தண்ணீரில் உள்ள படிமங்கள், மிக அழகாக ஒரு டிசைன் மாதிரி, அதுவும் மிகப்பெரிய ஓவியர் வரைந்த ஓவியம் போல இருந்ததாம். ‘வெறுப்பு’ என்று எழுதி வைத்த டம்ளருக்குள் இருந்த தண்ணீரில் உள்ள படிமங்கள், அலங்கோலமாகக் காட்சியளித்ததாம். இந்த விஞ்ஞான உண்மையை படித்தவுடன் எனக்கு தங்கவேல் தான் முதலில் நினைவிற்கு வந்தார்.
என்னுடைய திருமணத்திற்கு வந்த நடிகர் தங்கவேல், மணமக்களாகிய என்னையும், என்னுடைய மனைவியையும் வாழ்த்தினார்.
எம்.ஜி.ஆர். இறந்த அன்று, ராஜாஜி மஹாலில் நடிகர் தங்கவேலுடன் நானும் நின்றிருந்தேன். அவர் பழைய நினைவுகளில் மூழ்கியபடி துக்கத்தை அடக்கிக் கொண்டு மிகவும் அமைதியாக இருந்தார்.
நான் பல வருடங்களாக திரையிலும், நேரிலும் ரசித்து வந்த நடிகர் தங்கவேல் 28.9.1994-ல் மரணம் அடைந்தார். ஆனால் என்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியாமல் போய்விட்ட வருத்தம் இன்றும் எனக்குள் அழுத்திக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர் பற்றி கலைவாணர்
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம், பல நடிகர்கள் சீடர்களைப் போல் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், காகா ராதாகிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், சி.எஸ்.பாண்டியன், புளிமூட்டை ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் போன்றவர்கள். அவர்களில் நடிகர் தங்கவேலும் ஒருவர். கலைவாணர் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடன் இருந்த நடிகர்களிடம், “ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) ரொம்ப நல்லவன்டா. அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அவனுக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அவனுடைய மனம் நோகக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.
அதுபற்றி தங்கவேல் என்னிடம் சொல்லும்போது, “கலைவாணர் எங்களைப் பார்த்து, எம்.ஜி.ஆரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆர். தான், எங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, “கலைவாணர், எம்.ஜி.ஆரிடம் ‘ராமச்சந்திரா! எந்தக் காலத்திலும் மறந்தும் விளையாட்டாகக் கூட மதுவை தொட்டுவிடாதே. பல கலைஞர்களின் வாழ்க்கையை, உனக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்’ என்றும் சொன்னார். கலைவாணரின் அந்த அறிவுரையை, எம்.ஜி.ஆர். கடைசி வரை பின்பற்றினார். கலைவாணர் மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொட்டி கொட்டி கொடுத்தார்.” என்று என்னிடம் சொன்னார்.
-தொடரும்.
Related Tags :
Next Story