‘‘தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன்’’ -சந்தானம் பேட்டி
நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.
தமிழ் பட உலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வந்த சந்தானம், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,’ ‘இங்க என்ன சொல்லுது,’ ‘இனிமே இப்படித்தான்,’ ‘சக்கப்போடு போடு ராஜா,’ ‘தில்லுக்கு துட்டு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
இந்த படங்களை தொடர்ந்து, ‘தில்லுக்கு துட்டு–2’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். படம், விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில், சந்தானம் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ‘தில்லுக்கு துட்டு–2’ படத்தை பற்றி அவர் கூறியதாவது:–
‘‘பொதுவாக, பேயை பார்த்துதான் மனிதர்கள் பயப்படுவார்கள். ஆனால், மனிதர்களை பார்த்து பேய் பயப்படுவது போல், ‘தில்லுக்கு துட்டு–2’ படத்தின் கதை நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நான் ஆட்டோ டிரைவராக வருகிறேன்.
சந்திரபாபு, நாகேஷ் ஆகியோரின் படங்களை பார்த்த திருப்தி, இந்த படத்தை பார்ப்பவர்களுக்கு கிடைக்கும். ஸ்ரீதா சிவதாஸ் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். எங்கள் இருவருடன் மொட்டை ராஜேந்திரன், சிவசங்கர் மாஸ்டர் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படம் சென்னை மற்றும் கேரளாவில் வளர்ந்து இருக்கிறது.
நான், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிப்பேன். நகைச்சுவை நாயகனாக நடித்து ரசிகர்களை திருப்தி செய்வதில், எனக்கு மகிழ்ச்சி. நான் நடித்து முடித்த சில படங்கள் திரைக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் நான் அல்ல. அந்த படங்களில் நான் நடித்து முடித்து விட்டேன்.
‘தில்லுக்கு துட்டு–2’ என் சொந்த படம் என்பதால், அதை குறிப்பிட்ட தேதியில் திரைக்கு கொண்டு வருகிறேன்.’’
இவ்வாறு சந்தானம் கூறினார்.
Related Tags :
Next Story