பிரதமரும் மோகன்லாலும் என்ன பேசிக்கொண்டார்கள்?


பிரதமரும் மோகன்லாலும் என்ன பேசிக்கொண்டார்கள்?
x
தினத்தந்தி 3 Feb 2019 7:20 AM GMT (Updated: 3 Feb 2019 7:20 AM GMT)

மலையாள பிரபலம் மோகன்லால் இப்போதும் துள்ளலோடும், துடிப்போடும் நடித்துக்கொண்டிருந்தாலும் அவர் நடிகராகி 41 வருடங்கள் ஆகிவிட்டன.

லையாள பிரபலம் மோகன்லால் இப்போதும் துள்ளலோடும், துடிப்போடும் நடித்துக்கொண்டிருந்தாலும் அவர் நடிகராகி 41 வருடங்கள் ஆகிவிட்டன. அனுபவங்கள் தந்திருக்கும் பாடத்தின் அடிப்படையில் புதிய கதையம்சம்கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்துக்கொண்டிருக் கிறார். அவரிடம் சில கேள்விகள்:

‘விஸ்வசாந்தி பவுண்ட்டேஷன்’ என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறீர்கள். அதன் நோக்கம் என்ன?

“விஸ்வசாந்தி என்ற வார்த்தையில் எனது தந்தை விஸ்வநாதன் நாயர்- தாயார் சாந்தகுமாரி ஆகிய இருவரது பெயர்களும் இணைந்திருக்கின்றன. நான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது என்னிடம் சிலர், ‘நாங்கள் கேரள மக்களுக்காக ஏதாவது செய்ய விரும்புகிறோம். அதற்கு எந்த அமைப்பை தொடர்புகொள்வது? என்ன செய்வது?’ என்றெல்லாம் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியாமல் இருந்தது. அதற்கு சரியான பதிலாக அமைந்ததுதான், விஸ்வசாந்தி. வழக்கமாக தொண்டு நிறுவனங்கள் செய்யும் பணியில் இருந்து வித்தியாசமாக அதன் சேவையை செய்ய விரும்புகிறோம். இ்ந்தியாவின் உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் பலர் நமது நாட்டிற்காக ஏராளமான நல்ல காரியங்களை செய்ய விரும்பு கிறார்கள். அவர்களை ஒருங்கிணைப்பதற்கான முயற்சி களை மேற்கொண்டிருக்கிறோம். ஆரோக்கியம், மலைவாழ் மக்கள் துறை போன்றவைகளை முன்னேற்றுவது பற்றிய விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. ஒருவருக்கு உதவி செய்வதைவிட, அந்த உதவியை பல பேருக்கு கொண்டுபோய் சேர்ப்பதுதான் நல்லது.

இத்தகைய செயல்பாடுகள் மூலம் நீங்கள் அரசியலில் இறங்க அடித்தளம் அமைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?

“அரசியல்வாதிகளில் யாருடன் நான் நேரத்தை செலவிட்டாலும் அது பிரசாரத்திற்குரியதுபோல் ஆகிவிடுகிறது. அப்போதே என்னை அந்த கட்சியின் ஆளாக முத்திரை குத்திவிடுவார்கள். நான் பிரதமரை சந்தித்துவிட்டு வந்ததும், நான் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்றெல்லாம் சிலர் அறிவிப்பு செய்துவிட்டார்கள். ஆனால் அரசியலில் நான் இல்லை. அதில் எந்த வகையிலும் எனக்கு விருப்பம் இல்லை. நான் இப்போது இருப்பதுபோல் சுதந்திரமாக செயல் படவே விரும்புகிறேன்.

மலையாள சினிமாவில் இருந்து ஒரு சிலரே அரசியலில் இறங்கியிருக்கிறார்கள். நடிகர் பிரேம் நசீர் பழைய காலத்தில் முயற்சி செய்தாலும், அது தோல்வியில் முடி வடைந்தது. ஆனால் இப்போது முகேஷ், கணேஷ், இன்னசென்ட், சுரேஷ்கோபி போன்றவர்களெல்லாம் அரசியலில் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். பலர் என்னிடம் அரசியலில் இறங்கவேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிடவேண்டும் என்றும் சொன்னார்கள். ஆனால் நான் விரும்பவில்லை. தெரியாத துறையில் இறங்காமல் இருப்பதே நல்லது”

40 ஆண்டுகாலமாக போட்டி மனப்பான்மையோடு நடிக்கும் நீங்களும், மம்மூட்டியும் மிகுந்த நட்புணர்வோடு பழகுகிறீர்களே, எப்படி அது உங்களால் முடிகிறது?

“எங்களுக்கு இடையே போட்டி மனப்பான்மை இருப்பதாக யார் சொன்னது? எங்களுக்குள் போட்டிமனப்பான்மை எதுவும் கிடையாது. மலையாள சினிமாவில் கொஞ்சம் பேர்தான் இருக்கிறார்கள். எங்கள் அனைவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்துகொண்டிருக்கிறது. மம்மூட்டியால் நடிக்க முடிந்த கதாபாத்திரங்களை அவர் ஏற்றுக்கொள்கிறார். என்னால் முடிந்தவைகளில் நான் நடிக்கிறேன். சமூக வலைத் தளங்களில் வருவதுபோல் எங்களுக்குள் எந்த சம்பவமும் இல்லை”

நீங்கள் பெரும்பாலும் பலரையும் ‘மோனே’ என்று அழைக்கிறீர்கள். அது ஏன்?

“பெரும்பாலான நேரங்களில் மற்றவர் களின் பெயர் மறந்துபோய்விடுகிறது. அதில் இருந்து தப்பிப்பதற்காக ‘மோனே’ என்று அழைக்கத் தொடங்கினேன். அதுவே பின்பு பழக்கமாகிவிட்டது. இப்படி அழைப்பதில் ஒரு பலனும் இருக்கிறது. அன்பையும் கோபத்தையும் அப்படியே கொட்டிவிடலாம்”

110-க்கும் மேற்பட்ட நடிகைகளோடு நடித்திருக்கிறீர்கள். அடுத்த ஜென்மத்தில் அவர்களில் யாராக பிறக்க ஆசை?

“இந்த ஜென்மத்தின் ஆசையே இன்னும் தீரவில்லையே.. ஆனாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன், அவர்கள் அனைவருடனும் அடுத்த ஜென்மத்திலும் கதாநாயக னாக நடிக்கவேண்டும்”

குடும்ப வாழ்க்கையின் சிறப்பு பற்றி..?

“திருமண வாழ்க்கை எனக்கு உலகிலே அற்புதமானதாக தோன்றுகிறது. கணவன்- மனைவி இருவரும் வெவ்வேறு விதமான சுபாவங்களை கொண்ட ஜீவிகள் என்ற உண்மையை உணர்ந்துகொண்டால், அவர்களுக்குள் ஒரு பிரச்சினையும் வராது. அவரவர் சுபாவத்தை மாற்ற முயற்சித்தால் நாம் இல்லாமல் போய்விடுவோம். ஒருவரிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் ஏற்றுக்கொண்டால் போதாது. அவரது சுபாவத்தில் இருக்கும் எல்லா பாவங்களையும் விரும்பவேண்டும்.

சின்னச்சின்ன ஆசைகளை அடையாளங்கண்டு அவைகளை வளர்த்துக்கொண்டு சென்றால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தலைவலி ஏற்படும்போது காட்டும் பரிவும், பாசமும் போதும் முழுமகிழ்ச்சிக்கு. நான் ஒன்றே ஒன்றை மட்டும் முழுமையாக செய்கிறேன். 99 சதவீதம் உண்மையை சொல்ல முயற்சிப்பேன். ஒரு சதவீதம் தமாஷ். பொசசிவ்னெஸ் ஒரு பந்தத்திலும் இருக்கக்கூடாது. காதலும் தேவையில்லை. காதலிக்கவே செய்யவேண்டும்”

உங்கள் மகள் விஸ்மயா நடிக்க வருவாரா?

“மகன் பிரணவ் நடிகராகியிருப்பது போதுமல்லவா! மகளது விருப்பம் தியேட்டரை பற்றியது. தற்போது அமெரிக்காவில் நாடகம் பற்றி படித்துக்கொண்டிருக்கிறார்”

பிரதமர் மோடியை நீங்கள் சந்தித்தபோது..?

“அவர் என்னை மோகன்ஜி என்று அழைத்தார். நாங்கள் அரசியல் பற்றி பேசவே இல்லை. நான் சொன்னதை எல்லாம் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்தார். நான் சினிமாவுக்கு வந்து 41 வருடங்கள் ஆகிவிட்டது என்றதும் ஆச்சரியப்பட்டார். நான் நடித்திருக்கும் கர்ணபாரம் என்ற சமஸ்கிருத நாடகத்தை பற்றி சொன்னேன். கிருஷ்ண ஜெயந்தி அன்று நான் அவரை சந்தித்தேன். அந்த நாளை நினைவுபடுத்தவில்லை என்றபோதும், ஆன்மிக சிலை ஒன்றை எனக்கு பரிசாக தந்தார். கேரளாவை பற்றியும், எனது அறக்கட்டளை பற்றியும் நிறைய பேசினோம். எனது கனவுத்திட்டமான ஹோலிஸ்டிக் யோகா சென்டரை பற்றி சொன்னபோது, ‘மோகன்ஜி நான் யோகாவின் தீவிர விசிறி’ என்று பதில்சொன்னார். அதற்குரிய உதவிகளை செய்வதாகவும் சொன்னார். அரசியல் பற்றிய அறிவு எனக்கு இல்லாமல் இருப்பதால், அது பற்றி நான் எதுவும் சொல்லவில்லை”

Next Story