‘காற்று வெளியிடை’ படத்தைப்போல சம்பவம்: அபிநந்தன் சிக்கியது குறித்து நடிகர் கார்த்தி உருக்கம்


‘காற்று வெளியிடை’ படத்தைப்போல சம்பவம்: அபிநந்தன் சிக்கியது குறித்து நடிகர் கார்த்தி உருக்கம்
x
தினத்தந்தி 1 March 2019 12:00 AM GMT (Updated: 28 Feb 2019 7:58 PM GMT)

சென்னை போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கியிருக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியும், சோகமும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபோன்ற ஒரு சம்பவத்தை சித்தரிப்பது போலத்தான் கடந்த 2017-ம் ஆண்டில் வெளியான ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தின் கதையும் அமைந்திருந்தது.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அந்த படத்தில் கார்த்தி நடித்து இருந்தார். அதில் அவர் விமானப்படை வீரராக வந்தார். அவர் எல்லை தாண்டும்போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி விடுவார். பின்னர் அங்கு கடும் சித்ரவதை அனுபவிக்கும் அவர், பாகிஸ்தானியர்களின் பிடியில் இருந்து தப்பி இந்தியாவுக்கு திரும்புவதை திரைக்கதையாக்கி இருந்தனர்.

இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் கார்த்தி ராணுவ வீரர்களிடம் கடுமையான பயிற்சிகளை பெற்றார். குறிப்பாக தற்போது பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் உள்ள அபிநந்தன் தந்தையும் அவருக்கு பயிற்சி அளித்து இருந்தார்.

தனக்கு பயிற்சி அளித்தவரின் மகனே, அந்த படத்தின் கதையைப்போல பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியிருக்கும் சம்பவத்தை அறிந்து கார்த்தி அதிர்ச்சி வெளியிட்டு உள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் உருக்கமாக கூறியிருப்பதாவது:-

“ஒவ்வொரு இந்தியரின் உணர்விலும் இன்று ராணுவ வீரர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒட்டுமொத்த தேசமும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் பின்னால் நிற்கிறது. நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான இதயமும் தியாகமுமே நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

இந்திய விமானப்படையின் மிகச்சிறந்த விமானிகளை நான் சந்திக்க நேர்ந்தது அதிர்ஷ்டவசமானது. அவர்களில் பலரை நான் படத்திற்காக சந்திக்க நேர்ந்தபோது மிகவும் பெருமைப்பட்டேன். அது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். நமது வீரர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”

இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்

Next Story