குருவியார் கேள்வி - பதில்கள்
உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி.குருவியார், தினத்தந்தி, சென்னை-600007
குருவியாரே, காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் படமாகிறதாமே...அதன் இயக்குனர் யார்? (பி.விஜய் சங்கர், சென்னை)
புலவாமா குண்டு வெடிப்பு சம்பவத்தை கருவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக 3 தமிழ் டைரக்டர்களும், ஒரு இந்தி பட டைரக்டரும் கூறுகிறார்கள். யாருடைய முயற்சி வெற்றி பெறும்? என்பது சில நாட்களில் தெரிந்துவிடும்.
***
ஓவியாவுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறதே...உண்மையா? (ஆர்.வி.பாஸ்கரன், வேலூர்)
‘‘எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. அதை இப்போது விட்டு விட்டேன்’’ என்று கூறுகிறார், ஓவியா. புகை பிடித்ததை துணிச்சலாக ஒப்புக்கொண்ட நடிகைகள் பட்டியலில் ஓவியாவும் இடம் பெற்றுவிட்டார்!
***
குருவியாரே, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சுந்தர் சி. இப்போது என்ன செய்கிறார்? (எஸ்.வெங்கடேஷ், கடலூர்)
சுந்தர் சி. இப்போது, ‘லட்சுமி ஸ்டோர்’ என்ற டி.வி. தொடரை இயக்கி வருகிறார். ‘இருட்டு’ என்ற திகில் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து ஒரு பிரபல கதாநாயகனை வைத்து பிரமாண்டமான படத்தை இயக்கவும் திட்டமிட்டு இருக்கிறார்!
***
ஜோதிகா, நயன்தாரா, ஹன்சிகா, திரிஷா ஆகியோரில் பேய் வேடத்தில் அதிகமாக பயமுறுத்தியவர் யார்? (வி.சாய்குமார், திருச்சி)
ஜோதிகா பயமுறுத்திய அளவுக்கு வேறு எந்த கதாநாயகியும் பயமுறுத்தவில்லை. அழகான பேய்களாக மிரட்டியிருந்தார்கள்!
***
குருவியாரே, விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான படம் எது? அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் யார்? (எம்.கதிர், பாலவாக்கம்)
விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான படம், ‘தென்மேற்கு பருவக்காற்று.’ அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், வசுந்தரா!
***
‘‘நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு...ஒன்று மனசாட்சி...’’ என்ற பாடல் இடம்பெற்ற படம் எது, பாடல் காட்சியில் நடித்தவர் யார்? (ஆர்.கோதண்டராமன், மதுரவாயல்)
அந்த பாடல் இடம்பெற்ற படம், ‘தியாகம்.’ பாடல் காட்சியில் நடித்தவர், ‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன்.
***
குருவியாரே, சூர்யாவும், கார்த்தியும் சேர்ந்து நடித்து ரசிகர்களின் ஏக்கத்தை போக்குவார்களா? (ஏ.தனசேகரன், விளாத்திகுளம்)
இருவருக்கும் பொருந்துகிற மாதிரி கதை வைத்து இருக்கிறீர்களா? கதை தயாராக இருந்தால் இருவருமே இணைந்து நடிப்பார்களாம்!
***
‘அகவன்’ என்று ஒரு படத்துக்கு பெயர் சூட்டியிருக்கிறார்களே...அதற்கு அர்த்தம் என்ன? (வே.தங்கதுரை, கோவை)
‘அகவன்’ என்றால் அகத்தை அழகாக வைத்திருப்பவன் என்று அர்த்தம். ‘ஆண்டவன்’ என்றும் ஒரு பொருள் இருப்பதாக கூறப்படுகிறது!
***
குருவியாரே, இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாகி விட்ட விஜய் ஆண்டனி, ஒரு படத்துக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்? (எச்.காஜாமுகைதீன், திண்டுக்கல்)
விஜய் ஆண்டனி தனது சம்பளமாக (இசையமைப்பதையும் சேர்த்து) ரூ.4 கோடி கேட்கிறாராம். ரூ.3 கோடி கொடுத்தால் வாங்கிக் கொள்கிறாராம். அதற்கு கீழே சம்பளத்தை குறைக்க அவர் தயாரில்லை!
***
நடிகைகளின் காதல் திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவது ஏன்? (இரா.ரெங்கசாமி, வடுகப்பட்டி)
எதிர்பார்ப்புகள் வெகு சீக்கிரமே நிறைவேறி, இவ்வளவுதானா? என்ற சலிப்பு ஏற்படுவதுதான் நட்சத்திர திருமணங்களின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள்!
***
குருவியாரே, நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு நயன்தாரா தனது படங்களில் சிபாரிசு செய்கிறாராமே...அது நிஜம்தானா? (கே.ரகுநாதன், நாகர்கோவில்)
நகைச்சுவையாக பேசுவதை நயன்தாரா விரும்பி ரசித்து கேட்பார். அவரை சமீபத்தில் அதிகமாக சிரிக்க வைத்தவர், யோகிபாபு! அந்த வகையில் நயன்தாரா தனது படங்களில் யோகிபாபு இருக்கும்படி பார்த்துக் கொள்கிறாராம்!
***
விஷாலும், ஆர்யாவும் நெருங்கிய நண்பர்களாச்சே...இருவரும் தங்கள் திருமணத்தை ஒரே மேடையில் வைத்துக் கொள்வார்களா? (இரா.புகழேந்தி, மயிலாடுதுறை)
நல்ல யோசனை! விஷாலும், ஆர்யாவும் இந்த யோசனை பற்றி நிச்சயமாக பரிசீலிப்பார்கள்!
***
குருவியாரே, கவுண்டமணி–செந்தில் போல் இன்று நகைச்சுவை ஜோடியாக யாரை சொல்லலாம்? (ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்)
கவுண்டமணி–செந்தில் இருவருக்கும் இணையாக வேறு எந்த நகைச்சுவை ஜோடியையும் ஒப்பிட முடியாது.
***
தனுஷ் நடித்து வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு எந்த அளவில் உள்ளது? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)
அந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. குரல் சேர்ப்பு, படத்தொகுப்பு, பின்னணி இசை சேர்ப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் நிறைவடைந்தபின், படம் திரைக்கு வரும் தேதி முடிவு செய்யப்படும்.
***
குருவியாரே, விளையாட்டு வீராங்கனை வேடத்தில் நடிக்க பொருத்தமான கதாநாயகிகள் யார்–யார்? (டி.ஜார்ஜ், ஊட்டி)
தன்சிகா, ரித்திகாசிங் ஆகிய இருவரும் வீராங்கனை வேடத்துக்கு நூற்றுக்கு நூறு பொருந்துவார்கள்!
***
‘பருத்தி வீரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தால், கார்த்தி நடிப்பாரா? (ஏ.தன்வீர் அகமது, உடுமலைப்பேட்டை)
அந்த படத்தை அமீர் டைரக்டு செய்வாரா?
***
குருவியாரே, அனுஷ்கா, திரிஷா போன்ற பிரபல நாயகிகள் 15 வருடங்களாக கதாநாயகிகளாக நீடித்து நிலைத்து நிற்பது போல் பல வருடங்கள் தாக்குப்பிடிக்க கூடிய தகுதியான இளம் நாயகி யார்? (இரா.அன்புக்கரசு, சிவகாசி)
அனுஷ்கா, திரிஷா போல் நீண்ட காலமாக நிலைத்து நிற்பார் என்ற கணிக்கப்படும் இளம் நாயகி, கீர்த்தி சுரேஷ்!
***
எம்.ஜி.ஆருடன் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி கதாநாயகியாக நடித்து இருக்கிறாரா? (ஏ.பாரூக், பேட்மாநகரம்)
‘தலைவன்’ என்ற படத்தில், எம்.ஜி.ஆருடன் ஜோதிலட்சுமி கதாநாயகியாக நடித்து இருந்தார்!
***
குருவியாரே, ‘கொடி’ படத்தில் வில்லியாக நடித்தது போல், திரிஷா தொடர்ந்து வில்லியாக நடிப்பாரா? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)
இனிமேல் வில்லியாக நடிப்பதில்லை என்பதில் திரிஷா உறுதியாக இருக்கிறாராம்!
***
விஜய் நடிக்கும் 63–வது படம் விளையாட்டை மையப்படுத்திய கதை என்கிறார்களே...அது சரிதானா? (ரா.லிபின் ஆலஞ்சோலை)
சரிதான்.
***
Related Tags :
Next Story