ஐந்துவேளை சாப்பாடு - அதியா ஷெட்டியின் கவர்ச்சி ரகசியம்
அதியா ஷெட்டி, இந்தி நடிகை மட்டுமல்ல! அதையும் தாண்டி பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் போன்ற பல முகங்கள்கொண்ட சுனில் ஷெட்டியின் மகள்.
அதியா ஷெட்டி, இந்தி நடிகை மட்டுமல்ல! அதையும் தாண்டி பல திறமைகளை தன்னகத்தே கொண்டவர். இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் அதிபர் போன்ற பல முகங்கள்கொண்ட சுனில் ஷெட்டியின் மகள். அதியாவுக்கு புகழ், தனது தந்தையால் வந்ததல்ல. அவரது தாத்தா ஐ.எம்.கத்ரி புகழ்மிக்க கட்டிடக்கலைஞர். வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்களில் ஒன்றான மும்பை நேரு சென்டரை வடிவமைத்தவர், அவர்தான். அதியாவின் பாட்டி விபுலா கத்ரி பிரபல சமூக சேவகி. அவர்தான் லாபநோக்கற்ற புகழ்பெற்ற தொண்டு நிறுவனமான ‘சேவ் சில்ரன் இந்தியா’ என்ற அமைப்பை தொடங்கியவர்.
இத்தகைய புகழ்பெற்ற குடும்ப பின்னணியை கொண்ட அதியா ஷெட்டி, இன்று நடிகையாக மிளிர்ந்து வருகிறார். அதியாவின் குழந்தைப்பருவம் மற்றவர்களைப்போல சாதாரணமாக அமைந்ததல்ல. புகழ்பெற்ற குடும்பத்தினராக இருந்தாலும் பிர பலங்கள் வசிக்கும் பகுதியில் அவர்கள் வசிக்கவில்லை. அல்டாமவுண்ட் சாலையில் சாதாரண மக்களுக்கு மத்தியிலேயே வசித்தனர்.
அதியா அமெரிக்கன் பள்ளியில் படித்தார். அவருடைய இளைய சகோதாரர் அகான் விளையாட்டுத்துறையில் சாதித்துக்கொண்டிருக்கிறார். அவர்களது தாயார் மானா ஷெட்டி குடும்பத்தலைவி. மிகுந்த பொறுப்புணர்வுடன் குழந்தைகளை வளர்த்தெடுத்திருக்கிறார்.
இவரது வாழ்க்கைப் பாதை, சினிமாவின் பக்கம் திரும்பியது பற்றி அதியாவிடம் கேட்டால், “நான் எனது விருப்பப்படி சிந்திக்கவும், செயல்படவும் அனுமதிக்கப்பட்டேன். அதுதான் என்னை புகழ்பெற்ற குடும்பத்திலிருந்து சினிமாத் துறையில் அடியெடுத்து வைக்க உதவியது. பெண்களை சுயமாக சிந்திக்கவும், செயல்படவும் பெற்றோர் அனுமதிக்கவேண்டும். பெண்களுக்கு அனுபவமே சிறந்த கல்வி. அதை சுதந்திரமான சிந்தனைகள் மூலம்தான் அவர்களால் பெற முடியும். சினிமாவே என் வாழ்க்கை என்று நான் நினைக்கவில்லை. மிக கவனமாக ஒவ்வொரு படத்தையும் தேர்வு செய்கிறேன். அதனால் நீண்ட இடைவெளி விழுகிறது” என்கிறார்.
அதியா 2 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். அவர் நடித்த முதல்படமான, ‘ஹீரோ’ 2015-ல் வெளிவந்தது. அடுத்த படம் 2017-ல் வெளிவந்தது. தற்போது 3-வது படத்தில் நடித்து வருகிறார். மிக உறுதியான, தெளிவான நடிகையாக சினிமா உலகில் வலம் வருகிறார் அதியா.
சினிமா உலகில் உச்சத்திற்கு சென்றவர் களையே உற்று நோக்குவதும், அவர்களைப் பற்றி பேசுவதும் வாடிக்கையாக இருப்பதை அதியா விரும்புவதில்லை. “நான் சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இல்லை. நான் சிறந்த பெண் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்கிறாா் அவா். “எங்கு திரும்பினாலும் தன்னைப் பற்றிய பேச்சு இருக்க வேண்டும் என்பது எனது எண்ணமல்ல. அப்படிப்பட்ட ஒன்றுக்காக ஓடி இறுதியில் எதைப் பெற போகிறோம். நாம் நல்லவராகவும், திறமையானவராகவும் இருந்தால் மக்கள் நம்மை பிரபலமானவர்களாக மாற்றிவிடுவார்கள். இது சினிமாத் துறைக்கும் பொருந்தும்” என்கிறார் தெளிவான சிந்தனை யுடன்.
அதியா தன்னைப் பற்றிய ஆழமான சிந்தனையும், சமூகத்தைப் பற்றிய தெளிவான பார்வையும் கொண்டவராக விளங்குகிறார். அவர் இணையதளத்தில் வழக்கமான பெண்களைப்போல குடும்ப போட்டோக்களையும், விலங்குகளை கொஞ்சு வதையும், இயற்கை காட்சிகளையும் வெளியிடுவதில்லை.இன்ஸ்டாகிராமில் தன்னம்பிக்கை மற்றும் தத்துவ பொன்மொழிகளை வெளியிடுவதிலும் அவரது நடத்தை வெளிப்படுகிறது.
“உண்மையான விடுதலை என்பது நீங்கள் கவலையற்றவராக நடிப்பதில் இல்லை. நீங்கள் கவலையின்றி வாழ்வதில்தான் இருக்கிறது” என்ற கனடா எழுத்தாளர் தஜ்வா ஸெபியன் எழுதிய வாா்த்தை அவரது விருப்பமான பொன்மொழிகளில் ஒன்றாகும்.
அழகையும், தனது குடும்ப புகழையும் அவர் அதிகமாக பயன்படுத்திக் கொள்வதில்லை. அதைச் சொல்லி அவர் எந்த வாய்ப்பையும் உருவாக்குவதில்லை.
திரைத்துறையானது அழகை அதிகம் எதிர்பார்க்கிறதா? என்ற கேள்விக்கு, “நான் அதிகமாக மேக்கப் போட்டுக்கொள்வதை விரும்பவில்லை. இயற்கையான எனது முகமே எனக்கான வாய்ப்புகளை பெற்றுத் தரும் என நம்புகிறேன். அதையே விரும்புகிறேன். கண்களாலும், உதடுகளாலுமே என்னால் கவர்ச்சிகாட்ட முடியும்.” என்று பதிலளிக்கிறார் அதியா.
அவர் தனது ஒல்லியான உடல் அழகிற்கு காரணம், விளையாட்டு ஆர்வமே என்கிறார். “நீச்சல், கூடைப்பந்து, தடகள விளையாட்டுகளில் சிறுவயதில் இருந்து ஈடுபட்டதே எனது உடல் அழகிற்கு காரணம். அதற்காக எனது சகோதரருக்கு நன்றி சொல்வேன். நாங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒன்றாக விளையாட அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் இருவருமே நன்றாக விளையாடுவோம். விளையாட்டு எங்களுக்கு வாழ்க்கையை ஆழமாக கற்றுத்தந்தது. நாங்கள் வெற்றி, தோல்வியை ஒன்றாக பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். அதனால் எளிதில் சோர்ந்துபோய்விடமாட்டோம்” என்று தத்துவார்த்தமாக பேசுகிறார்.
உணவில் அதிக கட்டுப்பாடுகள் எல்லாம் வைத்துக் கொள்ளாத அவர், உடல் சீராக செயல்படுவதற்காக சர்க்கரை நோயாளி கள்போல 5 வேளையாக உணவை பிரித்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதியாஷெட்டி தற்போது ‘மோடிசூர் சக்னாசூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுபற்றி அவர் கூறும்போது, “இது நான் எதிர்பார்த்திராத புதுவகையான கதை, இது எனக்கு சவாலான கதாபாத்திரம், அதனால் அதை விரும்பி செய்கிறேன்” என்கிறார்.
தாயும், தந்தையும் தனக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று கூறும் அவர், “எனது தாயாருடன் இருக்கும்போது நான் சோர்வடைவதே இல்லை. அவர் என்னை எல்லா நேரங்களிலும் இயல்பாகவும், சமநிலையுடனும் இருக்கப் பழக்கினார். முதல் படம் வெளியாக இருந்த நாட்களில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்த போது, எனது தந்தை ‘நீ பயப்படுவதை நிறுத்து. நீ பயப்படுவதால் படம் தடைபடவோ, புதிய வாய்ப்பை உருவாக்கப்போவதோ இல்லை. நம்பிக்கையாக இரு என்று நம்பிக்கையூட்டினார்” என்கிறார்.
Related Tags :
Next Story