யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவி: பிரியங்கா சோப்ராவை நீக்க பாகிஸ்தான் மனு


யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவி: பிரியங்கா சோப்ராவை நீக்க பாகிஸ்தான் மனு
x
தினத்தந்தி 3 March 2019 10:53 PM GMT (Updated: 3 March 2019 10:55 PM GMT)

யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்குவதற்காக, பாகிஸ்தான் மனு அளித்துள்ளது.


புலவாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி இந்திய துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமான படையினர் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்திய ராணுவ நடவடிக்கையை இந்திய நடிகர்-நடிகைகள் பலர் பாராட்டினர். நடிகை பிரியங்கா சோப்ராவும் வரவேற்று இருந்தார்.

இதனால் பாகிஸ்தானில் பிரியங்கா சோப்ராவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பிரியங்கா சோப்ரா யுனிசெப்பின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். இதன் மூலம் நடுநிலையாக செயல்பட வேண்டிய அவர் இந்திய ஆயுத படைகளுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார். எனவே அந்த பதவியை அவர் வகிக்க கூடாது என்று சமூக வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

இந்திய படைகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் யுனிசெப் நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும். இல்லாவிட்டால் நீக்க வேண்டும் என்று வற்புறுத்தி 2,200 பேர் கையெழுத்திட்டு ஆன்-லைன் மூலம் யுனிசெப்புக்கு மனு அளித்துள்ளனர்.


Next Story